/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! முழுவீச்சில் பணியில் ஈடுபட அதிகாரிகள் திட்டம்
/
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! முழுவீச்சில் பணியில் ஈடுபட அதிகாரிகள் திட்டம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! முழுவீச்சில் பணியில் ஈடுபட அதிகாரிகள் திட்டம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்! முழுவீச்சில் பணியில் ஈடுபட அதிகாரிகள் திட்டம்
ADDED : செப் 17, 2025 12:31 AM

விழுப்புரம்; பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டத்தில் ஏரிகள், அணைகள், தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விவசாயத்தையே பெரும்பாலும் மூலதன தொழிலாக கொண்டுள்ள பகுதியாக உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை நம்பியே, விவசாயம் நடைபெறுகிறது. விவசாயத்திற்கு செல்லும் நீர் ஏரிகள், குளங்களில் இருந்து பெரும்பாலும் செல்கிறது. இந்த நீர் பாசனங்கள் உள்ள ஏரிகள், அணைகள் அனைத்தும் பொதுப்பணி துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ளன.
விழுப்புரம் பொதுப்பணித்துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 505 ஏரிகள்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 115 ஏரிகள்; திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏரிகள்; உட்பட மொத்தம் 624 ஏரிகள் உள்ளன. இது மட்டுமின்றி அணைகள், தடுப்பணைகள் உள்ளன.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பருவமழையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் உட்பட அனைத்து நீர்நிலைகளிலும் நிரம்பின.
இதனால் ஏரிகளில் வழிந்த தண்ணீர் பெருக்கெடுத்து பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. இது மட்டுமின்றி, கால்வாயிலும் தண்ணீர் நிரம்பியதால் கழிவுநீர் குளம் போல குடியிருப்பில் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையை சமாளிக்க வழியின்றி அதிகாரிகள் திணறினர். மீண்டும் சகஜ நிலைக்கு விழுப்புரம் மாவட்டம் திரும்புவதற்கு 20 நாட்கள் ஆனது.
இந்த நிலை மீண்டும், வரும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏற்படாமல் இருக்க, பொதுப்பணி துறை அதிகரிகள், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின் பேரில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 624 ஏரிகளில், கடந்தாண்டு மழையால் 204 ஏரிகள் சேதமாகின. இந்த ஏரிகளில் போதிய நிதி வசதி இல்லாததால் தற்போது தற்காலிக பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு நிதி கோரி, கோப்புகள் அனுப்பியுள்ள நிலையில், பணம் கிடைத்தவுடன் நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பெரிய அணையாக உள்ள வீடூர் அணையில் தண்ணீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க 1,700 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஏரிகள், குளங்கள், தரைபாலம் அருகே உள்ளிட்ட 13 இடங்களில் 7,100 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தளவனுாரில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் திருக்கோவிலுாரில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
மாவட்டத்தில் பொதுப்பணி துறை சார்பில், பருவமழையால் இந்தாண்டு பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும், மழை தருணங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.