/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
/
வீட்டுமனை பட்டா கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
ADDED : அக் 29, 2025 07:58 AM

விழுப்புரம்: அரகண்டநல்லுார் பகுதியில் வீட்டுமனைப் பட்டா கேட்டு நாம் தமிழர் கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த அரகண்டநல்லுார், காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவில் நிலத்திற்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், வீடு கட்டி வசித்து வருகின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், பட்டா வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என, நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி மாநில ஒருங்கிணைப்பாளர் சர்புதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்களுடன், நேற்று முன்தினம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.
போராட்டம் நடத்த அனுமதி இல்லாததால், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்கும்படி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று, டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

