/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.20 லட்சத்தில் நந்தன் கால்வாய் துார்வாரும் பணி; செஞ்சி அருகே கலெக்டர் துவக்கி வைப்பு
/
ரூ.20 லட்சத்தில் நந்தன் கால்வாய் துார்வாரும் பணி; செஞ்சி அருகே கலெக்டர் துவக்கி வைப்பு
ரூ.20 லட்சத்தில் நந்தன் கால்வாய் துார்வாரும் பணி; செஞ்சி அருகே கலெக்டர் துவக்கி வைப்பு
ரூ.20 லட்சத்தில் நந்தன் கால்வாய் துார்வாரும் பணி; செஞ்சி அருகே கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 29, 2025 10:41 PM

விழுப்புரம்; பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சலாறு குறுக்கே உள்ள கீரனுார் அணைக்கட்டில் இடதுபுறம் உள்ள தலைப்பு மதகிலிருந்து நந்தன் கால்வாய் துவங்குகிறது.
இந்த கால்வாய், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைக்கல் முதல் 12.400 கி.மீ., வரையிலும், விழுப்புரம் மாவட்டத்தில் தொலைக்கல் 12.400 கி.மீ., முதல் 37.880 கி.மீ., வரையிலும் அமைந்துள்ளது. இந்த தொலை கல்லிற்கு பின், விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் வட்டங்களில் சங்கிலி தொடர் ஏரி மூலம் ஏரிகளுக்கு நீர் வழங்கப்படுகிறது.
நந்தன் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில், கீழ்பென்னாத்துார் தாலுகாவில் 14 ஏரிகள் மூலம் 1,56 6.20 ஏக்கரும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் 10 ஏரிகள் மூலம் 1,650.20 ஏக்கரும், விக்கிரவாண்டி தாலுகாவில் 9 ஏரிகள் மூலம் 2,589.12 ஏக்கரும், விழுப்புரம் தாலுகாவில் 3 ஏரிகள் மூலம் 792.12 ஏக்கர் என மொத்தம் 36 ஏரிகள் மூலம் 6,597.64 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்தாண்டு பெஞ்சல் புயல் தாக்கத்தால் நந்தன் கால்வாய் கரையோர பகுதிகள் சேதமாகியது. இதை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் நிரந்தர சீரமைப்பு பணிகள் செய்வதற்காக, 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பேரில், வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நந்தன் கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது. இந்த பணிக்கு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் 19 லட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் விருப்ப நிதியில் இருந்து 1 லட்சம் உட்பட மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணிகள் நடைபெறும்.
இந்த பணிகளில் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைகிறது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் வழியாக, விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த துார்வாரும் பணியை, செஞ்சி அடுத்த சோ.குப்பம் பகுதியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் சத்யா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.