மாவட்ட தலைநகரில் நவீன கலையரங்கம்... அவசியம்! விழுப்புரம் நகராட்சி திடலில் அமைக்கப்படுமா?
மாவட்ட தலைநகரில் நவீன கலையரங்கம்... அவசியம்! விழுப்புரம் நகராட்சி திடலில் அமைக்கப்படுமா?
UPDATED : ஜூன் 10, 2026 06:25 PM
ADDED : ஜூன் 10, 2026 06:22 PM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நவீன கலையரங்கம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இதனை, நிறைவேற்றிட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொருட்காட்சிகள், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கலையரங்கம் அவசியமாக உள்ளது.
இதற்காக ஒவ்வொரு முறையும், அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இத்துடன், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் முக்கிய தலைவர்க பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும். லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நகராட்சி திடலில் பிரமாண்டமான அளவில், அரசு சார்பில் கலையரங்கை உருவாக்கிட வேண்டும்.
இங்கு, விழா மேடை பக்கவாட்டில் மின் விளக்கு வசதி, மைதானத்தில் உயர்கோபுர மின் விளக்குகள், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரக் நலத்திட்ட பயனாளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, அரசு நிர்வாகம் சிரமமின்றி நடத்த முடியும். அத்துடன், அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகை அடிப்படையில், கலையரங்கத்தை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
இதன் மூலம் நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதற்கு வழி வகை உள்ளது.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கலையரங்கம் அமைத்திட, மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
