/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: மீண்டும் துளிர்விடும் கடைகள், கொடி கம்பங்கள்
/
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: மீண்டும் துளிர்விடும் கடைகள், கொடி கம்பங்கள்
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: மீண்டும் துளிர்விடும் கடைகள், கொடி கம்பங்கள்
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: மீண்டும் துளிர்விடும் கடைகள், கொடி கம்பங்கள்
ADDED : மே 29, 2025 11:29 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, பாரபட்சமாக பல இடங்களில் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு கடைகள், கொடி கம்பங்கள் மீண்டும் துளிர்விட்டுள்ளன.
விழுப்புரத்தில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, சாலை குறுகியதால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என புகார்கள் தொடர்ந்து வந்தது. தமிழகத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள், கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 15ம் தேதி, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. சென்னை நெடுஞ்சாலையில், சிக்னல் சந்திப்பில் தொடங்கி முத்தாம்பாளையம் வரையும், திருச்சி நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் வரையும், நேருஜி ரோடில் ரயில் நிலைய சந்திப்பு வரையும், மாம்பழப்பட்டு சாலையில் இந்திரா நகர் வரையும் அதிரடியாக சாலையோர ஆக்கிரமிப்புகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
நீண்டகாலமாக ஆக்கிரமித்திருந்த சாலையோர கட்சி கொடி கம்பங்கள், ஆக்கிரமிப்பு கடைகள், கடைகளின் முகப்பு கூரைகள் அகற்றினர். தொடர்ந்து, இரண்டு நாட்களாக கிழக்கு பாண்டி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
விழுப்புரத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு, அதிரடியாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பணி வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தில் கட்சி கொடி கம்பங்கள், கடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல், பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது மக்கள், வியாபாரிகள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
விழுப்புரம் சிக்னல் சந்திப்பில், முதலில் கட்சி கொடி கம்பங்களை மட்டும் அகற்றினர். அங்கிருந்த கொடி கம்பங்களின் கான்கிரீட் கட்டைகள் அகற்றவில்லை. சில இடங்களில் கொடி கம்பங்களை அகற்றாமல் விட்டனர். இது குறித்து, தொடர் புகார் எழுந்ததால், சிக்னல் பகுதியில் இருந்த கொடி கம்ப கட்டைகளை இடித்தனர். ஆனால், அந்த கட்டமைப்புகள் அகற்றாமல் அங்கேயே ஆக்கிரமித்து கிடக்கிறது.
இதே போல், அங்கு வரிசையாக இருந்த தற்காலிக கடைகள் போன்றவை அகற்றாமல் விட்டுள்ளனர்.
திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் தொடங்கி வழுதரெட்டி, பெரியார் நகர் வரை சாலையோர தற்காலிக கடைகள் அகற்றாமல் விடப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியார் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு பங்க் கடைகள் அகற்றாமல் உள்ளது. இதனால், அந்த பஸ் நிறுத்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. இதே போல், கிழக்கு பாண்டி ரோடு, சென்னை சாலையிலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமை யாக அகற்றாமல் விட்டதால், அதனை பார்த்து, மீண்டும் பழையபடி கடைகள் ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளால் தான் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும், உயிரிழப்புகளும் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, திருச்சி சாலை, சென்னை சாலை, கிழக்கு பாண்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் போதிய இடவசதியிருந்தும், ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் தொடர்வதால், நெருக்கடி தொடர்ந்து வருகிறது.