UPDATED : ஜூன் 04, 2026 10:25 AM
ADDED : ஜூன் 03, 2026 09:01 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாததால் சுகாதார சீர்கேட்டில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2007 ம் ஆண்டு துவங்கியது. 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165.68 கி.மீ., நீளத்திற்கு ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றது.
இதில், சாலாமேடு பகுதியில் ரூ.26.8 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுதும் நகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில் , குடிநீர் வடிகால் வாரியம் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த பணிகள் கடந்த 2014ம் ஆண்டு நிறைவடைந்தது.
இதற்கிடையே, கடந்த 2011ம் ஆண்டு நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி, எருமனந்தாங்கல், காகுப்பம் ஆகிய 5 ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டது.
பின், இந்த ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2020ம் ஆண்டு நிதி ஆதாரமாக நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.65.75 கோடி மானியமாகவும், தனியார் வங்கி மூலம் ரூ.163.58 கோடி கடனாகவும் பெறப்பட்டது. இதில், மீதமுள்ள தொகை ரூ.33.67 கோடி நகராட்சியின் பங்கு தொகையாகும்.
இந்த பணிகளும் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த ஊராட்சிகளுக்கு காகுப்பம் பகுதியில் தனியாக ரூ.12.65 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளை கடந்த நிலையிலும், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையில் நிரந்த தீர்வு ஏற்படாமல் உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதார சீர்கேட்டதால் சிக்கி தவித்து வருகின்றனர்.
ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி சாலைகளிலும், வீதிகளிலும் பெருக்கெடுத்து குளமாக தேங்கி நிற்கிறது. அடைப்புகளை முறையாக துார்வாராததால் கழிவுநீர் அடைத்து கொண்டு குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்னை தற்போது பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகேயும் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வரை பலரும் சுகாதார சீர்கேட்டால் தவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், நகராட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், பாதாள சாக்கடை பிரச்னையை தீர்க்க போதிய நிதி இல்லாமல் உள்ளதாகவும் அலட்சியாக பதில் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் நகரில் ஒன்று திரண்டு ஆங்காங்கே விரைவில் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
