வானுார்: வானுார் அரசு விதைப் பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் விதை பயிர்களை, வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானுார் அரசு விதைப் பண்ணை நெல், உளுந்து மற்றும் எள் விதைகளை உற்பத்தி செய்து, விழுப்புரம் மாவட்டம் முழுதும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வருகிறது. தை மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள் டி.எம்.வி 7 என்ற ரகம் 4 ஏக்கர் பரப்பில் ஆதார விதைப்பண்ணை அமைத்து, தற்சமயம் பூ பூத்து காய்க்கும் தருவாயில் உள்ளது. இந்த விதைப்பண்ணையை வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார். பூவிதழ் நோய் தென்படுவதால், உடனடியாக பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க அறிவுறுத்தினார்.
இதிலிருந்து பெறப்படும் விதைகள் வரும் காரிப் பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். வானுார் அரசு விதைப்பண்ணை வேளாண் அலுவலர் சவுந்தர்ராஜன் உடனிருந்தார்.

