/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்! நாளுக்கு நாள் நீர் நிலைகள் அழிந்து வரும் அபாயம்
/
ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்! நாளுக்கு நாள் நீர் நிலைகள் அழிந்து வரும் அபாயம்
ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்! நாளுக்கு நாள் நீர் நிலைகள் அழிந்து வரும் அபாயம்
ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்! நாளுக்கு நாள் நீர் நிலைகள் அழிந்து வரும் அபாயம்
ADDED : ஜூலை 30, 2024 11:44 PM

செஞ்சி : செஞ்சி பகுதியில் ஏரிகள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுப்பதிலும், அகற்றுவதிலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் நீர் நிலைகள் அழிந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முழுதும் விவசாயம் சார்ந்த பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்கள் உள்ளன. இந்த இரண்டு தாலுகாக்களிலும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை ஏரிகள். இந்த பகுதியில் பொதுப்பணித்துறை, ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் என 550க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. நந்தன் கால்வாய் மூலம் செஞ்சி ஒன்றியத்தில் 10 ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.
கடந்த காலங்களில் ஏரிகளுக்கு நீர் வரும் பாசன வாய்க்கால்களை விவசாயிகள் ஒன்றிணைந்து ஆண்டுக்கு ஒரு முறை துார் வாரி பராமரித்து வந்தனர்.
ஏரி வரத்து வாய்க்காலையும், பாசன வாய்க்காலையும் ஆக்கிரமிப்பதை விவசாயிகளும், கிராம பொது மக்களும் பெரும் குற்றமாக கருதினர். பொதுப்பணித் துறை துவங்கப்பட்டு ஏரிகளை அரசு நிர்வகிக்க துவங்கிய பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வாய்க்கால்களையும் பொதுப்பணித் துறையே பராமரித்தது. பல இடங்களில் நிதி பற்றாக்குறையால் பல ஆண்டுகளாக வாய்க்கால்களை துார்வாரி பராமரிக்காமல் விட்டு விட்டனர்.
இலவச மின் திட்டம் வந்த பின்னர் பெரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர் ஏரி பாசனத்தை கைவிட்டு விட்டு, முழுதும் கிணற்று பாசனத்திற்கு மாறி விட்டனர். இவர்கள் ஏரி பாசன வாய்க்கால்கள் அழிவதைப் பற்றி கவலைப்படவில்லை.
ஏரியை நம்பி விவசாயம் செய்வது குறைந்ததால் பல இடங்களில் விவசாயிகளே வரத்து வாய்க்காலையும், பாசன வாயக்காலையும் ஆக்கிரமித்து அழித்து விட்டனர்.
இது போல் ஏரிகளும், வாய்க்கால்களும் அழிவதை தடுக்கவும், மீட்கவும் பொதுப்பணித்துறை எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஏரிகள் அழிவது குறித்து கவலையடைந்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித் துறையினர் அவசர கோலத்தில் அரைகுறையாக கணக்கெடுப்பு நடத்தி, அரைகுறையாக ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்தனர்.
செஞ்சி பகுதியில் புகார்கள் வரப்பெற்ற ஜம்போதி, தச்சம்பட்டு, கோணை, மேல்ஒலக்கூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்றினர். இந்த ஏரிகளில் அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.
தாண்டவசமுத்திரம் ஊராட்சி எல்லையில் 149 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடப்பேரியில் இப்போது வரை 60 சதவீதம் ஏரியை ஆக்கிரமித்து பல ஆண்டாக பயிர் செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் பயிர் தண்ணீரில் மூழ்காமல் இருக்க ஏரி தண்ணீரை திறந்து வெளியேற்றி வருகின்றனர்.
இதே போல் சத்தியமங்கலம், ஆலம்பூண்டி ஏரி வரத்து மற்றும் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகள் குறித்து நன்றாக தெரிந்திருந்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தால் அரசியல் ரீதியான பிரச்னை வரும் என பொதுப்பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் செஞ்சி பகுதியில் மேலும் பல ஏரிகள் அழியும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில் செஞ்சி மற்றும் மேல்மலையனுார் பகுதியில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை ஏரிகளில் முழுமையாக பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

