/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்.... 300 பேப்பர் ஆர்டர்... கல்வி, சமூக சேவைகளில் முத்திரை பதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை
/
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்.... 300 பேப்பர் ஆர்டர்... கல்வி, சமூக சேவைகளில் முத்திரை பதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்.... 300 பேப்பர் ஆர்டர்... கல்வி, சமூக சேவைகளில் முத்திரை பதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்.... 300 பேப்பர் ஆர்டர்... கல்வி, சமூக சேவைகளில் முத்திரை பதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை
ADDED : ஜூன் 29, 2025 03:13 AM

விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை, கல்விச் சேவையில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு, பல்வேறு விருதுகளை பெற்று சாதித்து வருகிறார்.
விழுப்புரம் அடுத்த சுந்தரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன் மகள் சரசு. தற்போது, கண்டமங்கலம் ஒன்றியம், கணக்கன்பாளையம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர், படிக்கும் போதே, ஆசிரியையாக ஆக வேண்டும் என்ற கனவோடும், தான் பயின்ற பள்ளியில் ஆசிரியையாகி தனது ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை கல்வித் தரத்தில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்ற கனவுகளோடு படித்து ஆசிரியையாகி சாதித்துள்ளார்.
இவர், நினைத்தது போலவே, தான் படித்த பள்ளியான கண்டமங்கலம் ஒன்றியம், வாணியம்பாளையம் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக 20 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். தனது சொந்த கிராமமான சுந்தரிப்பாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள 20 கிராமங்களில் முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்குரிய இடத்தையும் பிடித்துள்ளார்.
கடந்த 21 ஆண்டுகளாக கல்விச் சேவையில் உள்ள சரசு, கடந்த 15 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர், பள்ளிக்கல்வித் துறையின் விருதான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கடந்த 2021-22ம் ஆண்டு பெற்றுள்ளார்.
இவர், கடந்த 1995-97ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பொருளியல் முதுகலை பட்டயம் படிப்பில் கோல்டு மெடலை அப்போதைய தமிழக கவர்னர் பாத்திமா பீவியிடம் பெற்றுள்ளார்.
மேலும், ஆசிரியை சரசு, கல்விச் சேவை மட்டுமின்றி பொது சேவையாக கொரோனா கால கட்டத்தில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வ பணி செய்ததற்காக கடந்த 2019-20ம் ஆண்டு சிறந்த தன்னார்வ பணி பாராட்டு சான்று பெற்றுள்ளார். மேலும், இவர் மக்களுக்குத் தேவையான உணவு, உடை, கபசுர குடிநீரும் வழங்கினார். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்தார்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மாநில, மாவட்ட, ஒன்றிய கருத்தாளராக ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
சிறந்த கருத்தாளர் என்ற சான்றிதழை குடியரசு தின விழாவில், கலெக்டரிடம் பெற்றுள்ளார்.
மாற்றுத்திறன், பழங்குடி, ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, போட்டிகளில் பங்கேற்று வெல்லும் முறைகளை கற்பித்து அவர்கள் வெற்றி பெறவும் செய்து சாதித்துள்ளார். சிறந்த சமூக பணிக்கான முனைவர் பட்டமும், அரசின் புத்தக திருவிழாவில், பொறுப்பாசிரியையாக செயல்பட்டு மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.
இது மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் வயதுள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் செல்கிறார்களா என கண்டறிவது. குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது போன்ற சிறந்த சேவைகளை செய்து வருகிறார்.
பவ்டா வானொலியில் தேர்தல் விழிப்புணர்வு, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள், போட்டிகளுக்கான விழிப்புணர்வு பாடல்களை பாடி பரிசும் பெற்றுள்ளார்.
புதுச்சேரி, அகில இந்திய வானொலி நிலையத்தில், இவர் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசியுள்ளார். தமிழ்நாடு பாடநுால் உருவாக்கும் குழுவில் உறுப்பினராக செயல்பட்டு, 5ம் வகுப்பு தமிழ் பாடம் எழுதும் குழுவில் சேர்ந்து பாடபுத்தகம் எழுதியுள்ளார்.
விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்றதற்காக, முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார்.
தற்போதைய கல்வி அமைச்சர் மகேஷிடம், நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.