நம்ம பள்ளி....நம்ம வாத்தியார் : சுதந்திரம் அடைவதற்கு முன்னரே துவங்கப்பட்ட ஸ்ரீகாமாட்சி விலாஸ் நடுநிலைப்பள்ளி
நம்ம பள்ளி....நம்ம வாத்தியார் : சுதந்திரம் அடைவதற்கு முன்னரே துவங்கப்பட்ட ஸ்ரீகாமாட்சி விலாஸ் நடுநிலைப்பள்ளி
UPDATED : ஆக 29, 2026 06:12 PM
ADDED : ஆக 29, 2026 06:03 PM

திண்டிவனம்: திண்டிவனம் நகரத்தின் மையப்பகுதியான அரசு மருத்துவமனை செல்லும் வழியிலுள்ள பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ளது, ஸ்ரீ காமாட்சி விலாஸ் நிதியுதவி நடுநிலைப் பள்ளி.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர், கடந்த 1937 ல் துவங்கி, 89 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளி கடந்த, 1937, ல் துவங்கி 1938, ம் ஆண்டு, திண்டிவனம் அப்பாவுலு செட்டியாரால் மறைந்த அவரது மகளின் நினைவாக, மகளிர் ஆரம்ப பள்ளியாகத் துவங்கப்பட்டது.
அந்த சமயத்தில் வாழ்ந்த தேசபக்தர்கள், கல்வி நாட்டமுள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான ஆதரவு அளித்ததால் பள்ளி சிறப்பாக செயல்பட்டது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆய்வாளர் பரிந்துரையால், கடந்த, 1937, ல் அரசு மகளிர் ஆரம்பப் பள்ளியாக அங்கீகாரம் கிடைத்தது.
ஆரம்ப காலத்தில் திண்ணை பள்ளிக்கூடமாக செயல்பட்டது. அப்பாவுலு செட்டியார் நோய்வாய்ப்பட்டு அவரது மறைவிற்கு பின் நாகம்மை பள்ளியை நிர்வகித்து வந்த மறைந்த அப்பாசாமி முதலியார் இந்த பள்ளியை நிர்வகித்து வந்தார்.
அப்போது அவரது தீவிர முயற்சியால் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார். இடையில் காந்திய முறையில் ஆதார கல்வி பள்ளியாகவும் நடைபெற்று வந்தது.
இந்த பள்ளியை ஒரு சிறந்த நபரிடம் ஒப்படைக்க விரும்பிய அப்பாசாமி, திண்டிவனம் நகரில் கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வந்த ராஜபாதரிடம் கடந்த, 1985ம் ஆண்டில் ஸ்ரீ காமாட்சி நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தை ஒப்படைத்தார்.
அந்த சமயத்தில் 15 வகுப்பு பிரிவுகளும், 650 மாணவர்களும், 17 ஆசிரியர்களும் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்தனர்.
இதையொட்டி கடந்த, 1989 ம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கடசுப்பிரமணியம், திருக்குறள் முனுசாமி ஆகியோரால் இரு தினங்கள், பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளி நிர்வாகியான ராஜபாதர் கடந்த 2022, ல் இயற்கை எய்திய பிறகு, பள்ளியின் புதிய செயலாளராக அவரது மகன் ரவீந்திரநாத் செயலாளராக பொறுப்பேற்று பள்ளியை சிறப்பாக, நடத்தி வருகிறார். பள்ளி சிறப்பாக செயல்படுவதற்கு நிர்வாகத்தினரும் துணையாக இருக்கின்றனர்.
