ADDED : அக் 12, 2024 11:00 PM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பனை விதைகள் நடும் விழா தொடர்பாக, அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள்,தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்கள் மூலம் 5 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பனை விதைகளை இலவசமாக வழங்க முன் வந்துள்ளனர்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கூட்டம் நடத்தி செயல்திட்டம் தீட்டி தேவையான பனைவிதைகளை சேகரித்து தயார் நிலையில் வைப்பது குறித்து பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெருவாரியாக பனை விதைகள் நடும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
பின், கலெக்டர் அலுவலக வளாகத்தில், பனை விதைகளை கலெக்டர் நட்டு வைத்தார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.