/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டோல்கேட் கட்டணம் குறைக்க கோரி கொத்தட்டையில் கட்சியினர் முற்றுகை; பேச்சுவார்த்தைக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கம்
/
டோல்கேட் கட்டணம் குறைக்க கோரி கொத்தட்டையில் கட்சியினர் முற்றுகை; பேச்சுவார்த்தைக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கம்
டோல்கேட் கட்டணம் குறைக்க கோரி கொத்தட்டையில் கட்சியினர் முற்றுகை; பேச்சுவார்த்தைக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கம்
டோல்கேட் கட்டணம் குறைக்க கோரி கொத்தட்டையில் கட்சியினர் முற்றுகை; பேச்சுவார்த்தைக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 24, 2024 08:03 AM

- நமது நிருபர்கள்-
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கொத்தட்டை டோல்கேட்டில் நேற்று முதல் கட்டண வசூல் துவங்கியது. கட்டணத்தை குறைக்க கோரி அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது.
விழுப்புரம்- நாகை இடையே 194 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வரை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
இச்சாலையில், கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை என்ற இடத்தில், டோல்கேட் அமைக்கப்பட்டு, நேற்று முதல் சுங்க கட்டண வசூல் துவங்கியது.
கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று சிதம்பரம் வழியாக தனியார் பஸ்கள் ஓடாது என அறிவித்தனர். அரசியல் கட்சியினர், பொதுமக்கள் டோல்கேட் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை போராட்ட குழுவினர் 500க்கும் மேற்பட்டோர், கொத்தட்டை டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காலை 8:05 மணிக்கு 'நகாய்' திட்ட அலுவலர் சக்திவேல், போலீஸ் பாதுகாப்புடன் டோல்கேட்டை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி, தனது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் 'நகாய்' திட்ட அலுவலர் சக்திவேல், புவனகிரி தாசில்தார் தனபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் திருமாறன், செயலாளர் தேசிங்குராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுங்க கட்டணம் குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்பதாக நகாய் திட்ட அலுவலர் சக்திவேல் கூறினார். அதை ஏற்று, மதியம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
பின்னர், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, உள்ளூர் மக்களுக்கான கட்டணம் மற்றும் சரக்கு வாகன டோல் கட்டணத்தை குறைக்க வேண்டும், பஸ் நிறுத்தங்களை உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டதால், வழக்கம்போல் டோல்கேட் செயல்பட துவங்கியது.