/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., மாநாட்டு வாகனங்களுக்கு டோல்கேட்களில் பாஸ் விநியோகம்
/
பா.ம.க., மாநாட்டு வாகனங்களுக்கு டோல்கேட்களில் பாஸ் விநியோகம்
பா.ம.க., மாநாட்டு வாகனங்களுக்கு டோல்கேட்களில் பாஸ் விநியோகம்
பா.ம.க., மாநாட்டு வாகனங்களுக்கு டோல்கேட்களில் பாஸ் விநியோகம்
ADDED : மே 11, 2025 02:58 AM
விழுப்புரம்: மாமல்லபுரத்தில் இன்று நடக்கும் பா.ம.க., மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு, போலீஸ் தீவிர கட்டுப்பாடு விதித்துள்ளதோடு, டோல்கேட்கள் மூலம் பாஸ் வழங்கி அனுமதித்தனர்.
மாமல்லபுரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று மாலை நடக்கிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். கடந்த காலத்தை போல், வழியில் அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மதுக்கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது.
டோல்கேட்களில் பாஸ் விநியோகம்:
விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி சாலையில் உள்ள கெங்கராம்பாளையம் டோல்கேட், திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட், விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் தென்னமாதேவி டோல்கேட், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி டோல்கேட், திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் டோல்கேட், உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி ஆகிய டோல்கேட்களில், மாவட்ட போலீஸ் மூலம் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி பாஸ் வழங்கும் பணி நேற்று காலை முதல் நடக்கிறது. அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே விழுப்புரம் மாவட்டத்தை கடந்து, செங்கல்பட்டு மாவட்டதில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்பதால், பா.ம.க., வினர் கட்டாயம் இந்த பாசை வாங்கி செல்ல போலீசார் அறிவுறுத்தி பாஸ் வழங்கி வருகின்றனர்.
இ.சி.ஆரில் தடை:
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து கடலூர், புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள், புதுச்சேரி-திண்டிவனம் மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் நான்கு வழிச்சாலைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல், சென்னை-திருச்சி, விக்கிரவாண்டி- கும்பகோணம், திருவண்ணாமலை-சென்னை நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில், விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.