/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாய்க்கால் உடைப்பை சரி செய்ய பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; 35 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
/
வாய்க்கால் உடைப்பை சரி செய்ய பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; 35 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
வாய்க்கால் உடைப்பை சரி செய்ய பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; 35 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
வாய்க்கால் உடைப்பை சரி செய்ய பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை; 35 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2025 09:38 PM

செஞ்சி; செஞ்சி அருகே வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செஞ்சி அடுத்த பாக்கம் மலை காடுகளில் துவங்கும் வராகநதியின் குறுக்கே கூடப்பட்டு என்ற இடத்தில் கடந்த, 1915ல் ஆங்கிலேயர்கள் தடுப்பணை கட்டி உள்ளனர்.
இதில் இருந்து, 10 கி.மீ., துாரத்திற்கு செல்லும் வாய்க்கால் மூலம் மேலச்சேரி, சன்னியாசி ஏரி, சிங்கவரம் பெரிய ஏரி, குப்பத்து ஏரி, சிறுகடம்பூர் பெரிய ஏரி, நாட்டேரி ஆகியவற்றிற்கு தண்ணீர் வரும். இந்த ஏரிகள் மூலம் 500 ஏக்கர் நிலமும் நேரடியாக, 200 ஏக்கர் நிலமும் பாசனம் பெற்று வந்தன. கால்வாய் வரும் பகுதியில் விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டு தோறும் குறையாமல் இருந்தது.
இந்த கால்வாயில் சிறுவாடி காட்டுப்பகுதியில் பூனைக்கண் மடை என்ற இடத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, 15 ஆண்டுகள் வரை பொதுப்பணித்துறையும், விவசாயிகளும் இணைந்து மழைக்காலத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் கொண்டு வந்தனர். இந்த மணல் தடுப்பும் அடுத்த சீசனுக்குள் உடைந்து விடும்.
இதையும் பொதுப்பணித்துறை கைவிட்டு விட்டது. இந்த இடத்தில் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தி கடந்த, 20 ஆண்டுகளாக சிங்கவரம், மேலச்சேரி விவசாயிகளும் பொது மக்களும் போராடி வருகின்றனர்.
வனத்துறை அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை தட்டி கழித்து வந்தது. கிராம மக்களின் போராட்டத்தால் இந்த ஆண்டு வனத்துறை அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை பணம் இல்லை என கைவிட்டு விட்டது.
இதையடுத்து ஒன்றிய நிதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஒன்றியத்தில் நிதி இல்லை என்பதால் வேறு நிதியில் செய்து தருவதாக கூறி உள்ளனர்.
இதையடுத்து சிங்கவரம், மேலச்சேரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று மேல்மலையனுார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீத்தாலட்சுமி ஆகியோர் வரும், 25ம் தேதிக்குள் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.