/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மக்கள் எதிர்பார்ப்பு! வரும் சட்டசபை தேர்தலுக்குள் அரசு நிறைவேற்றுமா?
/
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மக்கள் எதிர்பார்ப்பு! வரும் சட்டசபை தேர்தலுக்குள் அரசு நிறைவேற்றுமா?
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மக்கள் எதிர்பார்ப்பு! வரும் சட்டசபை தேர்தலுக்குள் அரசு நிறைவேற்றுமா?
செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க மக்கள் எதிர்பார்ப்பு! வரும் சட்டசபை தேர்தலுக்குள் அரசு நிறைவேற்றுமா?
ADDED : அக் 26, 2025 10:46 PM

செஞ்சி: செஞ்சி கோட்டையை வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சுற்றுலா தலமாக அறிவிக்கவும், நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுற்றலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆரணி தொகுதி எம்.பி., தரணிவேந்தன், செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் ஆகியோர் சமீபத்தில் செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் ராஜேந்திரன், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த பிறகு செஞ்சி கோட்டைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மூன்று மாதங்களில், செஞ்சி கோட்டையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அறிக்கை தயாரித்து சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் அறிவிப்பு செஞ்சி நகர மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலின் போது செஞ்சி தொகுதிக்கான மிக முக்கியமான வாக்குறுதியாக அரசு கல்லுாரி அமைப்பதும், சுற்றுலா மையமாக அறிவிப்பதும் இருந்தது.
ஆட்சி அமைக்கப்பட்ட அடுத்த மாதத்திலேயே அரசு கல்லுாரிக்கான அறிவிப்பு வெளியானது. மூன்று ஆண்டாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
உலக பராம்பரிய சின்னம் செஞ்சி கோட்டையை கடந்த, ஜூன் 11ம் தேதி யுனெஸ்கோ உலக பராம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு செஞ்சி கோட்டையை பல லட்சம் பேர் கூகுளில் தேடி உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் செஞ்சி கோட்டையை, இதுவரை சுற்றலா தலமாக அறிவிக்காமல் இருந்ததே, தமிழக மக்களில் பெரும்பாலானோர், செஞ்சி கோட்டை குறித்து தெரியாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது.
யுனெஸ்கோ அறிவிப்பிற்கு முன்பே, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய அளவில் அதிகம் பார்வையிடும் இடங்களின் பட்டியலில் செஞ்சி கோட்டை ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இப்போது இந்த எண் ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. செஞ்சி கோட்டைக்கு வரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
படகு சவாரி செஞ்சி கோட்டையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் முதன்மையானது படகு சவாரி. செஞ்சி கோட்டைக்கு உள்ளே உள்ள செட்டி குளம், திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரி இரண்டும் படகு சவாரிக்கு ஏற்றவை.
கோட்டையில் இருக்கும் செட்டி குளம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மாலை 5:00 மணிக்கு பிறகு அனுமதி கிடைக்காது.
திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரி செஞ்சி பேரூராட்சிக்கு சொந்தமானது. இதில் வரும் வருவாய் தமிழக சுற்றலாத்துறைக்கும், செஞ்சி பேரூராட்சியின் வளர்ச்சிக்கும் வழி ஏற்படுத்தும்.
ஒலி ஒளி காட்சி பி.ஏரியை தற்போது 2 கோடி அளவில் சீரமைத்துள்ளனர். அடுத்து, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க உள்ளனர். இங்கு ஒலி ஒளி காட்சி மூலம் செஞ்சி கோட்டையின் வரலாறு குறித்த படக்காட்சியை ஏற்படுத்தினால் இதுவும் சுற்றுலா பயணிகளை கவரும்.
பேட்டரி கார் செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இந்திய தொல்லியல் துறையினர் கோட்டையை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதிலும் அக்கறை காட்டுவ தில்லை.
சுற்றுலா பயணிகளுக்கு போதிய அளவு குடிநீர், கழிவறை, உட்கருவதற்கான பெஞ்ச் ஏற்பாடு செய்வதுடன், முதியவர்கள் செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க, பேட்டரி கார் வசதியை தமிழக அரசு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடு வெளிநாட்டு சுற்றலா பயணிகள் வந்து செல்லும் செஞ்சி கோட்டையில், போலீஸ் அவுட் போஸ்ட் இல்லை. இங்கு குற்ற சம்பவங்கள் நடந்து வந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு புறக்காவல் நிலையம் இயங்கி வந்தது.
தற்போது புறக்காவல் நிலையம் இல்லை. புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
சுற்றுலா தலம் செஞ்சிக்கோட்டையில் சுற்றலா திட்டங்களை செயல்படுத்த அடிப்படை தகுதியாக முதலில் சுற்றலா தலமாக அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் செஞ்சியில் சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு ஓட்டல், தங்கும் விடுதி துவங்க முடியும். இதன் மூலம் செஞ்சி நகரின் சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
அதனால், சட்டசபை தேர்தலுக்குள் செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து படகு சவாரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

