/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திறக்காமல் வீணாகும் புவியியல் பூங்காவால் மக்கள்... அதிருப்தி! பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் அவலம்
/
திறக்காமல் வீணாகும் புவியியல் பூங்காவால் மக்கள்... அதிருப்தி! பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் அவலம்
திறக்காமல் வீணாகும் புவியியல் பூங்காவால் மக்கள்... அதிருப்தி! பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் அவலம்
திறக்காமல் வீணாகும் புவியியல் பூங்காவால் மக்கள்... அதிருப்தி! பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் அவலம்
ADDED : மார் 23, 2026 05:03 PM

விழுப்புரம்: திருவக்கரையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புவியியல் பூங்கா புதர்மண்டி வீணாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வானுார் தாலுகா, திருவக்கரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் உள்ள குவாரிகள் மூலம் இந்த வரலாற்று சின்னங்களும் சேர்த்து சுரண்டப்பட்டு வந்தன.
இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையினர் கடந்த 2019ம் ஆண்டில் கோரிக்கை வைத்திருந்தனர். இதே போல், உள்ளூர் மக்களும், பல்வேறு வரலாற்று ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, அப்போதைய கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவக்கரையில் புவியியல் பூங்கா (ஜியோ பார்க்) அமைப்பதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதற்காக 50.15 எக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அரசு ஒப்பதல் வழங்கப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி புவியியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சண்முகம் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று, தற்போது கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய கட்டடம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாமல் பராமரிப்பின்றி புதர்மண்டியுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
திருவக்கரையில் மத்திய அரசின் சார்பில் தேசிய கல்மரப் பூங்கா ஏற்கனவே இயங்கி வருகிறது. ஆனாலும், கல் மரங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்ற காரணத்தினால், மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் புதிய புவியியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அருங்காட்சியகம், நுாலகம், காட்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடம் கட்டப்பட்டு, பல மாதங்களைக் கடந்த பின்னரும் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை.
தற்போது இந்த புதிய கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. சில நேரங்களில் இக்கட்டடம் திறந்தே இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருவக்கரை கிராமத்தில் இருந்து இந்த இடத்திற்குச் செல்வதற்கு போதுமான சாலை வசதி செய்யப்படவில்லை. இப்பூங்கா அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், புவியியல் பூங்காவை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர, மாவட்ட நிர்வாகமும், புவியியல் சுரங்கத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.

