/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேற்கூரை இல்லாத செஞ்சி டோல்கேட் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி
/
மேற்கூரை இல்லாத செஞ்சி டோல்கேட் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி
மேற்கூரை இல்லாத செஞ்சி டோல்கேட் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி
மேற்கூரை இல்லாத செஞ்சி டோல்கேட் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி
ADDED : ஏப் 26, 2025 03:50 AM

செஞ்சி: செஞ்சி, ராஜாம்புலியூர் டேல்கேட்டில் மேற்கூரை இல்லாததால், அங்கு பணிபுரியும் ஊழியர்களும், பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்களும் வெயிலில் கடும் அவதி அடைகின்றனர்.
திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி இரு வழி சாலையாக விரிவாக்கம் செய்து, செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராம எல்லையில் சுங்க வரி வசூலிக்கும் டோல்கேட் அமைத்தனர். 2 வழிகளிலும் தலா நான்கு லேன்கள் உள்ளன. 3 லேன்கள் தானியங்கி ஸ்கேனர்களும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களில் கட்டணம் வசூலிக்க ஒரு வழி உள்ளது.
ஊழியர்கள் கண்ணாடி பூத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். சுற்றுவட்டார மக்கள், சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலைக்கு செல்வதற்கு செஞ்சிக்கு சென்று பஸ் ஏரினால் நேர விரயம் ஆகும் என்பதால் டோல்கேட்டில் நின்று பஸ் ஏறுகின்றனர். ஆனால் டோல்கேட்டில் மழை, வெயிலுக்கு ஒதுங்க கூட மேற்கூரை இல்லை.
கொளுத்தும் வெயிலில் கண்ணாடி கூண்டிற்குள் டோல்கேட் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். பஸ் ஏற வரும் பொதுமக்களும் மேற்கூரை இல்லாததால் வெயிலில் வாடுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகள் படி இருவழி சாலை சுங்க சாவடிகளில் மேற்கூரை அமைப்பதில்லை என நகாய் அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் வெயில் காரணமாக நோய் வாய்பட்டால், வாங்கும் சம்பளத்தை உடல் நலனுக்காகவே செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
விதிமுறைகள் மக்களுக்காகவும், மக்களுக்காக பணிபுரியும் பணியாளர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. பல கோடி ரூபாய் திட்ட மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சில லட்சம் செலவு செய்தால் மேற்கூரை அமைக்க முடியும்.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயரதிகாரிகள் இப்பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்து தொழிலாளர்கள், பொது மக்கள் நலனுக்காக மேற்கூரை அமைக்க வேண்டும்.

