பிரியாணி கடையை உடைத்து சேதப்படுத்திய நபர்களால் பரபரப்பு
பிரியாணி கடையை உடைத்து சேதப்படுத்திய நபர்களால் பரபரப்பு
ADDED : ஏப் 08, 2026 11:11 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரியாணி கடை மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் கே.கே., ரோடு பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர் பாருக் மனைவி நைனமா பானு, 49; இவர், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவரது கடை முன் ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளார். இதை நைனமா பானு மகன் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இதன் முன்விரோதம் காரணமாக, அந்த ஆட்டோ டிரைவர் 10க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் பிரியாணி கடைக்கு சென்றார். அங்கு கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, நைனமா பானு மற்றும் அவரது மகன்களை தாக்கி மிரட்டல் விடுத்தனர். மேலும், கடை கள்ளாப்பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்துச்சென்றனர்.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். இது குறித்து நைனமா பானு கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
