/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வண்டி பாதை இடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மக்கள் மனு
/
வண்டி பாதை இடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மக்கள் மனு
வண்டி பாதை இடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மக்கள் மனு
வண்டி பாதை இடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மக்கள் மனு
ADDED : பிப் 17, 2024 05:31 AM
விழுப்புரம், : வண்டி பாதை இடத்தை ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திண்டிவனம் அடுத்த பேரணி பழைய காலனியை சேர்ந்த பொதுமக்கள், அளித்த மனு:
பேரணி கிராமத்தில் ஊரிலிருந்து காலனிக்கு செல்லும் பாதை குளத்திற்கு செல்லும் பாதையாகவும், பழைய காலனிக்கு செல்லும் பிரதான சாலையாகவும் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலை வண்டி பாதையாக அரசு புறம்போக்கில் ஒதுக்கியதன் பேரில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவ்வழியே மாட்டு வண்டி மற்றும் வாகனங்கள், சுவாமி ஊர்வலத்திற்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள தனிநபர் ஒருவர், இந்த வண்டி பாதை இடத்தை ஆக்கிரமித்து வேலி கட்டினார். பின், அவர், அந்த இடத்தை அரசு வருவாய் கணக்கில் நத்தம் என கூறி, திருத்தி பட்டா வாங்கியுள்ளார்.
அதன் பேரில், அவர் சாலையை அளந்து கல்போட்டு ஆக்கிரமித்து பொதுமக்கள் அவ்வழியே செல்லக்கூடாது என கூறி வருகிறார்.
கடந்த 14ம் தேதி பேரணி ஊராட்சி தலைவர், குடிநீர் பைப் அமைக்க சாலையோரம் பள்ளம் எடுத்த போது, ஆக்கிரமித்த நபர் பணிகளை நிறுத்தினார். இதனால், கிராம மக்கள் குடிநீர் கிடைக்க வழியின்றியும், சாலை வசதியின்றி தவிக்கின்றனர்.
எனவே, அந்த நபர் போலியாக வாங்கிய பட்டாவை ரத்து செய்வதோடு, வண்டிபாதையில் வாகனங்கள் செல்லவும், குடிநீர் பைப்லைன் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.