/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏர்ஹாரன்களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு... தேவை;அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு
/
ஏர்ஹாரன்களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு... தேவை;அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு
ஏர்ஹாரன்களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு... தேவை;அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு
ஏர்ஹாரன்களை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு... தேவை;அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு
ADDED : டிச 15, 2025 06:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பஸ்கள், லாரிகள் அதிகமாக பயன்படுத்துவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் போது, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து செல்ல வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மீறுவோர் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பது, விதிமுறை மீறல் தொடர்ந்தால் ஓட்டுநர் லைசென்ஸ் பறிமுதல் நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும்.
தற்போது விதிமுறை மீறல் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் டிரைவர்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
இதற்கு உதாரணமாக, பஸ்கள், லாரிகளில் அதிக சத்தம் எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை டிரைவர்கள் ஒலித்தபடி செல்கின்றனர். மோட்டார் வாகன சட்டப்படி 70 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவது விதிமீறல் ஆகும். இதனால், பொதுமக்களின் செவித்திறன் பெரிதும் பாதித்துள்ளது.
மாவட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியான சூழலிலும், அரசு மற்றும் மினி பஸ்களில் 150 டெசிபல் அளவுக்கும் மேலான, ஏர்ஹாரனை பொருத்தி விதிமுறை மீறி பயன்படுத்தி செல்கின்றனர். போக்குவரத்த மிகுந்த சாயைில் ஒரு சில டிரைவர்கள் ஹாரன்களில் கை வைத்தால் எடுக்காமல் தொடர்ந்து அடிப்பதால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் என பலரும் அஞ்சி நடுங்கி வழியை விடுகின்றனர்.
இது பஸ்கள் மட்டுமின்றி, கார்கள், இருசக்கர வாகனங்களிலும் ெஹல்லா, ரூட்ஸ் போன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தி மக்களை அச்சப்படுத்துகின்றனர்.
இதனால் சாலை விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, மக்களுக்கும் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, காது சிகிச்சை பிரிவு டாக்டர் ஒருவர் கூறுகையில், 'பொதுவாக, சராசரி மனிதனின் கேட்கும் திறன் ஒலி அளவு, அதிகபட்சம் 80 டெசிபல் இருக்க வேண்டும். பகல் நேரத்தில் ஒலியின் அளவு 53 டெசிபலும், இரவில் 35 டெசிபலும் அளவு இருந்தால் போதுமானதாகும்.
90 டெசிபலுக்கு மேல் ஒலியை, ஒருவர் 8 மணி நேரத்திற்கு தொடர்ந்து கேட்டால், அவருக்கு காது கேளாமை ஏற்படும்.
இரவு நேரங்களில் 35 டெசிபலுக்கு மேல் ஒலியை கேட்டால், உறக்கம் இன்மை ஏற்பட்டு உடல் நலம், மனநலம் பாதிக்கும். கருவுற்றிருக்கும் பெண்களின் சிசுவின் நரம்பு மண்டலம் பாதித்து, சிசு உருச்சிதைவு ஏற்படும் நிலையும் உருவாகும்' என்றார்.
விதிமுறை மீறும் ஏர்ஹாரன்கள் பற்றி ஒவ்வொரு முறையும் நாளிதழ்களில் செய்தி வெளியிடும்போது மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இரண்டு நாட்கள் நடவடிக்கை எடுத்து போட்டோவுக்க போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். அதன் பிறகு கண்டு கொள்வதில்லை.
இதனால், ஏர்ஹாரன்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை. அதிகரித்தபடிதான் செல்கிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் மூலம் தொடர் நடவடிக்கை எடுத்து அபராத தொகையை உயர்த்துவதுடன், டிரைவர்களின் லைசென்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஏர்ஹாரன்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படுவதுடன் நிரந்தர தீர்வு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

