ADDED : மார் 03, 2026 03:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 109 மையங்களில் துவங்கிய பிளஸ் 2 தேர்வில் 196 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. 109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 11 ஆயிரத்து 117 மாணவர்கள், 10 ஆயிரத்து 998 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 115 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் நாளில் 10 ஆயிரத்து 996 மாணவர்கள், 10 ஆயிரத்து 921 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 917 பேர் தேர்வு எழுதினர். 196 பேர் ஆப்சென்ட ஆகினர். மாற்றுத்திறன் மாணவர்கள் 320 பேர் தேர்வெழுதினர். இவர்களுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, சொல்வதை எழுதுவதற்கு உதவியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இத்தேர்வு பணியில் 109 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக ஊழியர்கள் என மொத்தம் 2,995 பேர் ஈடுபட்டுள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 135 நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பள்ளி கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் 10 பறக்கும் படையினர் திடீர் விசிட் செய்தனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி அரசு பள்ளி மையத்தில் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உடனிருந்தார்.
