/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., போராட்டம்: 37 பேர் மீது வழக்கு
/
பா.ம.க., போராட்டம்: 37 பேர் மீது வழக்கு
ADDED : டிச 26, 2024 07:06 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ம.க.,வினர் 37 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத மாநில அரசை கண்டித்து, நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பா.ம.க.,வினர், நகராட்சி திடலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வழியில் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே திரண்டிருந்தனர். அப்போது, பஸ் உள்ளிட்ட வாகனங்களை திருப்பி வழி விடாமல் போலீசார் பாரபட்சமாக நடப்பதாக கூறி, சிறிது நேரம் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக போராட்டம் நடத்தியதாக, பா.ம.க.,வினர் 37 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும், நகராட்சி திடலில், ஆர்ப்பாட்டத்திற்காக அனுமதியின்றி, பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததாக, பா.ம.க.,வினர் சிலர் மீது, வழக்கு பதிந்துள்ளனர்.
பா.ம.க., ஆர்ப்பாட்டத்தின் போது, துணை முதல்வர் உதயநிதிக்கு வைக்கப்பட்ட பேனரை கிழித்துவிட்டதாக, தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், பா.ம.க.,வை சேர்ந்த 10 பேர் மீது, வழக்கு பதிந்துள்ளனர்.

