/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு
/
மரக்காணத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 01, 2024 06:47 AM
மரக்காணம் : 'பெஞ்சல்' புயல் காரணமாக மரக்காணம் பகுதியில் 100 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மரக்காணம் பகுதியில் 'பெஞ்சல்' புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. அதையொட்டி, நேற்று காலை சென்னையில் இருந்து மரக்காணம் இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி வரும் வாகனங்களை போலீசார் நிறுத்தினர்.
மரக்காணத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 9:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரக்காணம் பகுதியில் மதியம் 4:00 மணிக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மரக்காணம், முருக்கேரி, கந்தாடு, பிரம்மதேசம் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. மின் தடையால், ஊராட்சி நிர்வாகத்தினர் ஜனரேட்டர் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றாததால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாரவாக்கம், கூனிமேடு இ.சி.ஆரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திண்டிவனம் மரக்காணம் சாலையில் ஆங்காங்கே வெள்ளம் சூழந்துள்ளதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.