வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னேற்பாடு:அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கல்
வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முன்னேற்பாடு:அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கல்
UPDATED : ஆக 10, 2026 05:58 PM
ADDED : ஆக 10, 2026 05:53 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை சீர்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார். மாவட்டத்தில் நீர் வளப் பாதுகாப்பு, குடிநீர் வழங்கல், மழைநீர் சேமிப்பு தொடர்பாக கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான், முக்கிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது, மழைநீர் சேமிப்பு, பருவ மழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:
அனைத்து வட்டாரங்களிலும், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்த வேண்டும். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளங்கள், குட்டைகள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.
நகர்ப்புற மற்றம் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குறையின்றி நாள் துாய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்வளத் துறை, ஊரக வளரச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் துார்வாருதல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், ஏரி வாய்கால்களை சரிசெய்து பராமரித்தல் போன்ற பணிகளை கண்காணித்து, பருவ மழைக்கு முன்பாகவே விரைந்து முடித்திட வேண்டும்.
மேலும், ஊரக, நகராட்சி மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் சரிசெய்து பயன்பாட்டிற்குப் கொண்டுவரப்பட வேண்டும்.
இதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்து நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேமிக்கும் கட்டமைப்புகளாக மாற்றிட வேண்டும்.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பழுதுநீக்கி உடன் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, பொது மக்களுக்கு, தடையின்றி குடிநீர் கிடைத்திட, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், ஊராட்சி உதவி இயக்குநர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், ஷபானா, நீர்வளத்துறை செயற்பொறியளார் அருணகிரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சக்திமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
