/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புள்ளியியல் துறை தரவுகள் முதன்மை செயலர் ஆய்வு
/
புள்ளியியல் துறை தரவுகள் முதன்மை செயலர் ஆய்வு
ADDED : ஆக 02, 2025 07:11 AM

விழுப்புரம் : மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிக்கப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மை செயலர் ஜெயா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
இதில், 7 வது சிறுபாசன கணக்கெடுப்பு, 2வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு, முதலாவது பெரிய மற்றும் நடுத்தர பாசன திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் முதாலவது நீரூற்றுகளின் கணக்கெடுப்பு பணிகளை, முதன்மை செயலர் ஜெயா சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
வேளாண்மை துறை சார்பில், பொதுப்பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் கீழ், அறுவடை பரிசோதனை செய்யும் பயிர்கள் குறித்த விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் போது புகைப்படம் தெளிவாக பதிவு செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், அறுவடை செய்யும் பயிர்களுக்கான மகசூல் விவரங்களை வேளாண்மை துறை, புள்ளியியல் துறை, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய துறைகள் இணைந்து ஒப்புதல் பெற்று துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.
நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள், மாவட்ட நல்லாட்சி குறியீடு, மாவட்ட கண்காணிப்பு அலகின் பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் இயக்குநர் (வேளாண்மை) பாரதி, வேளாண்மை துறை இணை இயக்குநர் சீனிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.