/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் பள்ளி வாகனங்கள்: கலெக்டர் தலைமையில் ஆய்வு
/
தனியார் பள்ளி வாகனங்கள்: கலெக்டர் தலைமையில் ஆய்வு
ADDED : ஏப் 26, 2025 04:10 AM

விழுப்புரம் :   விழுப்புரம் மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வை கலெக்டர் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
தனியார் பள்ளி வாகனங்களின் உறுதித் தன்மை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்திற்கு முன்னதாக, கோடை விடுமுறை காலத்தில் ஆய்வு செய்யப்படும். அதன்படி, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு நேற்று துவங்கியது.
வாகன ஆய்வு பணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்து கூறியதாவது:
விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களில் செயல்படும் 73 பள்ளிகளின் 281 வாகனங்களும், திண்டிவனம், வானுார், மரக்காணம் தாலுகாக்களில் செயல்படும் 48 பள்ளிகளின் 248 வாகனங்கள், செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் இயங்கும் 23 பள்ளிகளின், 82 வாகனங்கள் என மொத்தம் 144 தனியார் பள்ளிகளின் 611 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
முதல் நாள் 405 பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. பள்ளி வாகன உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகால கதவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
பழுதடைந்த வாகனங்கள் கண்டறிந்து, அதை சரிசெய்து 10 நாட்களுக்குள் மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து அனுமதி பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி வாகனத்தில் ஒரு உதவியாளர் கண்டிப்பாக நியமனம் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் தினசரி பதிவுகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. டிரைவர்கள் மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்,.
ஆய்வின்போது, தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம், டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை தொடர்பாகவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா, சி.இ.ஓ., அறிவழகன், ஆர்.டி.ஓ.,க்கள் அருணாசலம், முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ், முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

