/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
/
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில்... சிக்கல்; திண்டிவனத்தில் 18 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜன 31, 2024 02:31 AM

திண்டிவனம், : திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தி.மு.க.,கவுன்சிலர் குப்பை துகள்களை ஆணையாளர் முன் கொட்டி நகர்மன்ற கூட்டத்தில் பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகர்மன்ற கூட்டம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறாத சூழ்நிலையில், நேற்று காலை 11.15 மணியளவில் நகர்மன்ற கூட்டம் நடந்தது.நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆணையாளர் தமிழ்ச்செல்வி, நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், பொறியாளர் பவுல்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கிய உடன், தி.மு.க.,கவுன்சிலர்கள் சின்னச்சாமி, பார்த்தீபன் உள்ளிட்ட பலர், ஏன் கடந்த இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தவில்லை. கூட்டம் நடத்தாததால் வார்டு கோரிக்கை குறித்து பேசமுடியவில்லை என்று கூறினர்.
இதைதொடர்ந்து கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பேசும் போது,' நகராட்சியின் ஆண்டு வருவாய், செலவின கணக்கை மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நகர்மன்ற கூட்டத்தை மாதம், மாதம் நடத்த வேண்டும்.
நகராட்சியில் புதியதாக குப்பைகள் அள்ளுவதற்காக வாங்கப்பட்ட வாகனங்கள் ரிப்பேராகிவிட்டதால், வார்டுகளில் குப்பைகள் தேங்கியுள்ளது.நகராட்சி சார்பில் மரக்காணம் ரோட்டில் புதியதாக எரிவாயு தகன மேடை அமைத்ததற்கு நகராட்சிக்கு அ.தி.மு.க.,கவுன்சிலர் ஜனார்த்தன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தகன மேடை அமைப்பதற்கு கோர்ட் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நகராட்சி 25 வது வார்டு கவுன்சிலர் ரேகாநந்தகுமார், '' குப்பைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை அகற்றுகிறார்கள். கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டி எரிப்பதால் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறினார்.
குப்பையை கொட்டி போராட்டம்
இந்த நேரத்தில் 33 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சின்னச்சாமி திடீரென்று, நகர்மன்ற தலைவர், ஆணையாளர் இருக்கை அருகே வந்து 33 வது வார்டில் குப்பைகள் எரிக்கப்பட்ட குப்பை துகள்களை பையில் கொண்டு வந்து கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல் கொட்டியை குப்பை துகள்களை அப்புறப்படுத்த வந்த துாய்மை பணியாளரை, குப்பை துகள்களை அகற்ற வேண்டாம், கூட்டம் முடிந்த உடன் அகற்றுங்கள் என்று கூறினார்.
தீர்மான நகல்கள் கிழிப்பு
நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 51 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டது. இதற்கு தி.மு.க.,கவுன்சிலர்கள் பார்த்தீபன்,சின்னச்சாமி ஆகியோர், ஏற்கனவே நகர்மன்ற கூட்டத்தில் வார்டு பணிகள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுங்கள். தற்போது ஒரே சமயத்தில் கொண்டு வரப்பட்ட 51 தீர்மானங்களை நகராட்சி பொது நிதியிலிருந்து நிறைவேற்ற முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறி, இரண்டு கவுன்சிலர்களும் தீர்மான நகல்களை கிழித்து கீழே போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதன் பிறகு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,-பா.ம.க.,கவுன்சிலர்கள் ஆணையாளர், நகர்மன்ற தலைவரை முற்றுகையிட்டு, பொது நிதியிலிருந்து எப்படி 51 தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு பொது நிதி மூலம் கொண்டு வரப்பட்ட பல பணிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மீண்டும் 51 தீர்மானங்கள் கொண்டு வருதற்கு ஆதரவு இல்லை என்று, நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதில் தி.மு.க.,கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.,-பா.ம.க.,என 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல்
வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் தாங்கள் வருகை பதிவேட்டில் மட்டும்தான் கையெழுத்து போட்டுள்ளோம். தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
நகராட்சியில் மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 18 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததின் காரணமாக, மன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட 51 தீர்மானங்களும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.