வளவனுார், டி.வி.,நல்லுார், செஞ்சி காவல் நிலையங்களை பிரிப்பதற்கு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை
வளவனுார், டி.வி.,நல்லுார், செஞ்சி காவல் நிலையங்களை பிரிப்பதற்கு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை
UPDATED : ஆக 02, 2026 06:11 PM
ADDED : ஆக 02, 2026 05:20 PM

-நமது நிருபர்-: விழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், துரிதமாக விசாரணை மேற்கொள்ள வளவனுார், திருவெண்ணெய்நல்லுார், செஞ்சி காவல் நிலையங்களை பிரித்து புதிய காவல் நிலையங்கள் உருவாக்க காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய நான்கு போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளது. இதில், 31 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள், மதுவிலக்கு அமல்பிரிவு, டிராபிக் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. எஸ்.பி., தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை, திருட்டு, சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் மீது காவல் துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய அளவிலான எல்லைகள் உள்ள காவல் நிலைய கிராமங்களில் குற்றங்கள் நடக்கும்போது போலீசார் விரைந்து செல்ல முடியாத சூழல் நிலவி வருகின்றது. இதை தடுக்க குற்றங்கள் நடக்கும் பகுதிகளுக்கு போலீசார் விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுக்க பெரிய அளவில் எல்லைகளை கொண்ட காவல் நிலையங்களை இரண்டாக பிரிக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலைய எல்லையில் 93 கிராமங்கள் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய காவல் நிலையம் எனக்கூறப்படும் திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலைய எல்லையானது கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்ட எல்லைகள் வரை இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதிகளில் குற்றங்கள் நடந்தால் போலீசார் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், இந்த காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து அரசூரில் புதியதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளுக்கு இருந்து வருகின்றது. இதற்காக கடந்த 2016ம் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கோப்புகள் தயார் செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த கோப்புகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது புதிய அரசிற்கு இந்த கோப்புகளை தயார் செய்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
இதேபோன்று, 77 கிராமங்களை எல்லைகளாக கொண்டு வளவனுார் காவல் நிலையம் மற்றும் 64 கிராமங்களை கொண்டு கண்டமங்கலம் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த காவல் நிலையங்களின் எல்லையானது புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட எல்லைகளில் உள்ளது.
வளவனுார் காவல் நிலையத்தில் உள்ள கலிஞ்சிக்குப்பம் மற்றும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் செல்வதற்கு சிரமம் ஏற்படுகின்றது. இதனால், வளவனுார் மற்றும் கண்டமங்கலம் காவல் நிலையங்களை பிரித்து ராம்பாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க கோப்புகள் தயார் செய்து அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 83 கிராமங்களை எல்லைகளாக கொண்டு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய காவல் நிலையமாக செஞ்சி செயல்பட்டு வருகின்றது. இந்த காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து வல்லம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கோப்புகள் தயார் செய்து அரசிற்கு அனுப்பியுள்ளனர்.
வல்லத்தில் ஏற்கனவே போலீஸ் குடியிருப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த காவல் நிலையங்களை பிரித்து புதிய காவல் நிலையங்கள் உருவாக்கினால், குற்ற செயல்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை தடுக்க சுலபமாக இருக்கும் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். இதற்கான அறிவிப்பு வரும் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
