ADDED : டிச 23, 2025 06:17 AM

விழுப்புரம்: வளவனுார் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மடுகரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வளவனுார் அருகே சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தில் இருந்து சொர்ணாவூர் கீழ்பாதி வழியாக புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்துாரை இணைக்கும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வி.சி., கட்சியினரோடு, நேற்று காலை 10:00 மணிக்கு மடுகரை - மேல்பட்டாம்பாக்கம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கண்டமங்கலம் பி.டி.ஓ., கார்த்திகேயன் மற்றும் வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் 10:25 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
