/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் பொது ஏலம்: உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை
/
சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் பொது ஏலம்: உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை
சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் பொது ஏலம்: உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை
சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் பொது ஏலம்: உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை
ADDED : நவ 22, 2024 06:42 AM

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் திரிந்த மாடுகளை நேற்று நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். மீறி சாலைகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மாடுகள் பொது ஏலம் விடப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, எம்.ஜி.ரோடு, திரு.வி.க., வீதி, திருச்சி சாலை, சென்னை சாலை என முக்கிய சாலைகளில், அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகினர்.
சாலைகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மாடுகளைப் பிடித்து அகற்ற வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் வீரமுத்துகுமார் உத்தரவின் பேரில், விழுப்புரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராபர்ட், துப்புரவு ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம், நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் திரிந்த 10 மாடுகளை பிடித்தனர்.
பிடிபட்ட மாடுகளை பழைய நகராட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தனர். மாடுகளின் உரிமையாளர்கள் வந்ததும், மாடுகளை நகராட்சி பகுதி சாலைகளில் திரியவிடக் கூடாது என அறிவுறுத்தியும், முதல் முறை என்பதால், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இனி மாடுகள் பிடிபட்டால், மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தனர்.
நகராட்சி எச்சரிக்கை
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சாலைகளில் கால்நடைகளை திரிய விடக்கூடாது. தடையை மீறினால் பொது சுகாதார சட்டம் 1939ன் படி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிப்படி சாலையில், சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் செலுத்தாவிட்டால், கால்நடைகளை பிடித்த நாளில் இருந்து 3வது நாளில் பொது ஏலம் விடப்படும். இதனால், கால்நடை உரிமையாளர்கள் மக்களுக்கு தொந்தரவின்றி, தங்களது மாடுகளை பராமரித்துக்கொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.