ராமதாசின் பிடிவாத நடவடிக்கை: பா.ம.க., தொண்டர்கள் அதிருப்தி
ராமதாசின் பிடிவாத நடவடிக்கை: பா.ம.க., தொண்டர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 11, 2026 10:12 PM
விழுப்புரம்: தமிழகத்தில் பா.ம.க.,வின் இக்கட்டான சூழலையறிந்த மூத்த அரசியல்வாதியான ராமதாஸ், சொந்த கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை இறக்கியுள்ளது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினரை ஒருங்கிணைத்து, ராமதாஸ் 1984ல் வன்னியர் சங்கத்தைத் துவக்கியதோடு, 1987ல் பா.ம.க., கட்சியாக மாற்றி, இட ஒதுக்கீடு போராட்டங்களை நடத்தினார்.
தேர்தலில் தனித்து போட்டியிட்டு 1991ல் ஒரு தொகுதியில் பா.ம.க., வென்றது. பிறகு, 1996ல் 4 எம்.எல்.ஏ.,க்களாக உயர்ந்தது. பிறகு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து கட்சியை மூன்றாம் நிலைக்கு பலப்படுத்தினார்.
ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களிலும், திராவிட கட்சிகளுடன் பா.ம.க., கூட்டணி அமைக்கும் கட்சியே வெற்றி பெறும் என்ற நிலைக்கு உயர்ந்தது. 1998 லோக்சபா தேர்தலில் 4 எம்.பி.,க்கள், அடுத்த தேர்தலில் 5 எம்.பி.,க்கள், 2 மத்திய அமைச்சர்கள் ஏற்பட்டனர். 2001 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் 22 எம்.எல்.ஏ.,க்கள், 2006ல் தி.மு.க., கூட்டணியில் 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். பிறகு 2011ல் தி.மு.க., கூட்டணியில் 3 எம்.எல்.ஏ.,க்களாக சரிந்தது.
திராவிட கட்சிகள், தன் கட்சியை பலவீனப்படுத்தியதால், வெறுப்பான ராமதாஸ், இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றார். தனது மகன் அன்புமணிக்கு தலைவர் பதவி அளித்ததை தொடர்ந்து, அவர் நிர்வாகத்தில் தீவிரமாக இறங்கினார்.
இந்நிலையில், கடந்தாண்டு பா.ம.க.,வில் உட்கட்சி பூசல் வெடித்தது. குடும்ப பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டு ராமதாஸ், அன்புமணியும் தனியாக பிரிந்தனர்.
அன்புமணி தனி அணி அமைத்து பா.ம.க.,வினரை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார். அவரிடமே, கொடியும், சின்னமும் உள்ளது. இந்த தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் அன்புமணி இணைந்ததால், வெறுப்பான ராமதாஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளிடம் கூட்டணிக்கு பேசி வந்தார். பிறகு, சசிகலாவோடு கூட்டணி அமைத்து 30 தொகுதிகளில் ராமதாஸ் வேட்பாளர்களை இறக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் ராமதாஸ் அணி போட்டியிடுகிறது.
பா.ம.க., வினர் கடும் அதிருப்தி இதுகுறித்து பா.ம.க., வினர் கூறியதாவது:
சமூக நீதிப்போராளியன ராமதாஸ், கட்சியை துவங்கி 40 ஆண்டு காலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர். தன் குடும்பத்தினர் பதவிக்கு வரமாட்டார்கள் என கூறிய ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், தலித் ஏழில்மலை, பொன்னுசாமி, வேலு, மூர்த்தி, ஜி.கே.மணி, வேல்முருகன் போன்றவர்களுக்கு அமைச்சர், எம்.எல்.ஏ., பதவிகளை வழங்கி கட்சிப் பணியாற்றச் செய்தார்
ஆனால், பலர் பதவியை அனுபவித்து விட்டு சென்று விட்டனர். இதனால் தான், ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை களமிறக்கி, தலைவர் பதவியும் வழங்கினார். மத்திய அமைச்சராகவும் உயர்த்தி சிறப்பாக பணியாற்றச் செய்தார்.
ஆனால், இப்போது தி.மு.க.,வின் சூழ்ச்சியால், சுயநலவாதிகள் சிலரை நம்பி, அன்புமணியை எதிர்த்து ராமதாஸ் போராடுவது சரியானதாக இல்லை. ராமதாசின் கொள்கையில் நேர்மையான அரசியலை அன்புமணி முன்னெடுத்துச் செல்கிறார். அதனை வரவேற்காத ராமதாஸ், தேவையில்லாமல் தான் துவக்கிய கட்சியின் பிளவுக்கும், சரிவுக்கும் போட்டி போட்டு செயல்படுகிறார்.
துாண்டிவிடும் ஒருவரும் ராமதாசின் வேட்பாளராகவும் நிற்க முன்வரவில்லை என்பதே இதற்கு உதாரணம். தற்போதைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய தலைவர்கள் தான் ராமதாசிடம் உள்ளனர்.
முக்கிய மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட தற்போது விலகி அன்புமணியுடன் இணைந்து விட்டனர். போட்டிக்காக ராமதாஸ் 30 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். அவர்களும் வேறு வழியின்றி, ராமதாசின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, மனு தாக்கல் செய்தனர். தீவிர பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபடப்போவதில்லை.
இப்படியிருக்க, அவர்களுக்கு எத்தனை சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்பது ராமதாசுக்கும் தெரியும். சொந்த மகனை பழிவாங்கும் நோக்கத்தோடு சசிகலாவுடன் இணைந்து, தன் கட்சியை ஒழிக்க ராமதாஸ் தீவிரமாக செயல்படுவது, அதிருப்தியை தான் ஏற்படுத்தியுள்ளது.
அவர் மீது மரியாதை இருந்தாலும், அவரது வேட்பாளர்களுக்கு, கட்சியினர் பெரிதளவில் ஓட்டு போட வாய்ப்பில்லை என்பதும் அவருக்கே தெரியும். ஆனாலும், ஒரு சதவீதம் ஓட்டு போனாலும் பா.ம.க.,வுக்கு அது இழப்புதான் என்றனர்.
