/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரிய மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
/
அரிய மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
ADDED : மார் 15, 2026 04:25 AM

விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, கெடிலம் அடுத்த செஞ்சிக்குப்பம் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, சிங்கம் உருவத்துடன் கூடிய அரிய மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:
செஞ்சிக்குப்பம் ஏரிக்குள் சாய்ந்த நிலையில் பலகைக் கல் சிற்பம் காணப்படுகிறது. இதனை துர்கை என வழிபட்டு வருகின்றனர். இச்சிற்பம் மூத்ததேவியாவார். 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
ஆசனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்த நிலையில் மூத்ததேவி உள்ளார். வலது கை அபய முத்திரையுடனும், இடது கை ஆசனத்தின் மீது வைத்த நிலையிலும் உள்ளன. மார்பில் தடித்த புரிநுால் தவழ்கிறது. அழகிய தலை அலங்காரம், காதணிகள், கழுத்தணி மற்றும் இடையாடை ஆகியவற்றுடன் கலை நயத்துடன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இரு பக்கமும் அவரது மகன் மாந்தன், மகள் மாந்தி உள்ளனர். மாந்தியின் உருவம் இளவரசி போன்றுள்ளது. ஆயுதமான துடைப்பமும், காக்கைக் கொடியும் இடம்பெற்றுள்ளன. சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும், முன்னங்கால்களைத் தூக்கிய நிலையில், இரண்டு சிங்கங்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பாகும்.
இதுவரை வட மாவட்டங்களில் கண்டறியப்பட்ட மூத்ததேவி சிற்பங்களில், சிங்கம் இடம்பெற்றதாக தெரியவில்லை. இது அரியதும். தனித்துவமானதாக உள்ளது.
பல்லவர் காலத்தைச் (கி.பி.7-8ம் நூற்றாண்டு) சேர்ந்த இச்சிற்பம் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.
ஆய்வின்போது, சந்திரசேகரன், அனீஸ்வரன், சதீஷ்குமார், ஜவஹர் உடனிருந்தனர்.

