150 ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: நீர்நிலை துார்வாரும் பணிகளும் 'ஜரூர்'
150 ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: நீர்நிலை துார்வாரும் பணிகளும் 'ஜரூர்'
UPDATED : செப் 14, 2026 04:48 PM
ADDED : செப் 14, 2026 04:21 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 150 ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருவதுடன், நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் துார்வாரும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் ஏரி, குளம், நீர்வரத்து வாய்க்கால்களை துார்வாரி நிலத்தடி நீரை பாதுகாக்கவும், ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்திய கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான், மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளை பாதுகாத்து, மழைக்காலங்களில் அதிகளவு நீரை சேமித்து வைக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கைகள் குறித்து, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது, மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், கலிங்குகள் மற்றும் மதகுகள் சீர்படுத்தவும், நீர்வரத்து வாய்க்கால்களை துார்வாரவும், இதுவரை நடந்துள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்து, வரும் வடகிழக்கு பருவமழைக்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். குறிப்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இது குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகளில் கருவேல மரங்கள் பரவியுள்ளதை அகற்றும் பணிகள் நடக்கிறது.
உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான 75 ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 ஏரிகளிலும் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் பரவலாக நடந்து வருகிறது.
இதே போல், ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர்வரத்து வாய்க்கால்கள், குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் துார்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பருவமழையின் போது கிடைக்கும் மழைநீர் அந்தந்த பகுதி நீர்நிலைகளில் சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
