/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு: கலெக்டர் ஆய்வு
/
மழை பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு: கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 18, 2024 06:13 AM
விழுப்புரம் : காணை, முகையூர் ஒன்றியங்களில் கனமழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை பழனி ஆய்வு செய்தார்.
காணை ஒன்றியம், ஆரியூர், மல்லிகைப்பட்டு ஊராட்சி, முகையூர் ஒன்றியம் சென்னாகுணம், சத்தியகண்டனுார், காரணை பெரிச்சானுார் ஊராட்சிளில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
ஆழியூரில் பம்பை ஆற்றுக்கு உபரிநீர் செல்லும் ஏரியில் சேதமான கரைப்பகுதியை பார்வையிட்டு, பம்பை ஆறு குறுக்கே உள்ள தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.
பின், மல்லிகைபட்டில், பம்பை ஆறு குறுக்கேவுள்ள பாலம் கரை பகுதியில் இருபுறத்திலும் உடைந்த இடத்தில் கரை அரிப்பை தடுக்கும் பொருட்டு மணல் மூட்டைகள் வைக்கும் பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து சென்னாகுணத்தில் ஏரி உடைந்து சேதமான ஆயந்துார் - காரணை ஊராட்சிகளுக்கு செல்லும் சாலை தற்காலிகமாக சீரமைக்கப்படுவதையும், முகையூர் - கண்டாச்சிபுரம் சாலையில் உள்ள சத்தியகண்டனுாரில் மழை வெள்ளத்தால் 100 மீட்டர் அளவு சாலை சேதமாகியது.
இங்கு, தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி நடப்பதையும், இங்குள்ள பாலத்திற்கு பதில் புதிய பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக் உடனிருந்தனர்.