/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமணர் துாணை பாதுகாக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
/
சமணர் துாணை பாதுகாக்க ஆய்வாளர்கள் கோரிக்கை
ADDED : டிச 17, 2025 05:50 AM

கண்டாச்சிபுரம்: 'சமண பெண்கள் பயன்படுத்திய சல்லேகனை துாண் பாதுகாக்கப்பட வேண்டும்' என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன், மூன்று சல்லேகனை துாண்கள் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மூன்று துாண்களிலும், கண்டாச்சிபுரத்தில் வசித்த சமணப்பெண்கள், உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த குறிப்புகள் இருந்தன. அவற்றில் இரு துாண்கள் மாயமான நிலையில், தற்போது ஒரு சல்லேகனை துாண் மட்டும் உள்ளது.
'ஸ்வஸ்தி ஸ்ரீ பாலுச...' எனத் தொடங்கும் இந்த கல்வெட்டில், பாலுார் உடையான் பெருங்காடன் என்பவரின் மகள் பொக்கி என்பவர் உண்ணாநோன்பு இருந்து இறந்துள்ளார் என்பதை குறிப்பிடுகிறது.
வரலாற்று பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ''சல்லேகனை விரதம் என்பது உயிர் துறக்க, சமண நெறியில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு. 'தமிழர்களின் வடக்கிருத்தலுக்கும் சமணர்களின் சல்லேகனைக்கும் இருக்கும் ஒற்றுமைகளாக துயர் பொறுக்கும் துணிவையும், யாக்கை பற்றின்மையையும் அடிப்படை பண்புகளாக கூறலாம்.
''கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த இந்த சல்லேகனை துாணை அரசு பாதுகாக்க வேண்டும்,'' என்கிறார்.

