/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழும்... அபாயம்; வீட்டு வசதி வாரியத்தின் நடவடிக்கை தேவை
/
குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழும்... அபாயம்; வீட்டு வசதி வாரியத்தின் நடவடிக்கை தேவை
குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழும்... அபாயம்; வீட்டு வசதி வாரியத்தின் நடவடிக்கை தேவை
குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழும்... அபாயம்; வீட்டு வசதி வாரியத்தின் நடவடிக்கை தேவை
ADDED : மே 06, 2024 05:25 AM

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்ததால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் வீடுகளை காலி செய்துவிட்டனர். இதனை அகற்றிவிட்டு, புதிதாக கட்டடம் கட்டுவதற்கான திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு வீட்டுவசதி வாரியம் கட்டுப்பாட்டின் கீழ், 1999ம் ஆண்டு, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 192 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இங்குள்ள வீடுகள் சேதமடைந்து, பராமரிப்பு குறைந்ததால், இங்கு குடியிருந்தவர்கள் படிப்படியாக வெளியேறினர்.
கட்டடங்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து, வசிப்பதற்கு தகுதியற்ற நிலைக்கு மாறியது. குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டுவதற்கான கோப்புகள், அரசுக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து, 'தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்துள்ள குடியிருப்புகள் அனைத்தும், ஆய்வு செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும்.
இப்பகுதிகளில் விரைந்து வீடுகள் கட்டுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என தெரிவித்தார்.
அவர் கூறி 2 ஆண்டுகளாகியும், பழுதான கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தவும், புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோல் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 144 வீடுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான இந்த வாடகை குடியிருப்புகள் காலப்போக்கில், பராமரிப்பின்றி பழுதடைந்தன. கட்டடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டனர்.
இந்த குடியிருப்புகளை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, பழுதடைந்த கட்டடத்தில் குடியிருக்கும் மீதமுள்ள வாடகைதாரர்களை காலி செய்து, வீடுகளை ஒப்படைக்குமாறு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, அனைத்து வாடகைதாரர்களையும் முழுமையாக அப்புறப்படுத்த முடியாமல், வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர்.