/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி
/
ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ADDED : டிச 26, 2024 07:01 AM
விழுப்புரம் : மேல்மலையனுார் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல்மலையனுார் அருகே நொச்சலுார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராமானுஜம்,61; ஓய்வு பெற்ற ஆசிரியர். ஆன்லைன் டிரேடிங் குறித்து கடந்த அக்., 16ம் தேதி தனது மொபைலில் கூகுளில் தேடினார்.
அதிலிருந்த இரு மொபைல் எண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங் செய்வது பற்றி தெரிவித்துள்ளார்.
பின், மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்தை அனுப்பினார். இவருக்கு ரூ.67 லட்சம் லிங்கில் வந்தது போல காட்டியுள்ளது. இந்த பணத்தை அவர் எடுக்க முயன்ற போது, கமிஷன் தொகையாக ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இவரிடம் பணம் இல்லாததால், தனது நண்பர் அன்பழகனிடம் நடந்தவற்றை ரங்கராமானுஜம் கூறியுள்ளார். பின், இவர் கூறிய எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசியவுடன், மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பினார். இந்த லிங்கிற்குள் சென்ற அன்பழகன், மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 902 அனுப்பியுள்ளார். அதன்பிறகும் இவர்களுக்கு சேர வேண்டிய பணம் வரவில்லை.
அதனால் மொத்தமாக ரூ.13 லட்சத்து 49 ஆயிரத்து 902 பணத்தை இழந்தது தெரிந்தது. ரங்கராமானுஜம் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.