/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்த்துறை மீது சராமாரி... குற்றச்சாட்டு; விவசாயிகளின் ஆவேச பேச்சுக்கு அதிகாரிகள் கண்டிப்பு
/
குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்த்துறை மீது சராமாரி... குற்றச்சாட்டு; விவசாயிகளின் ஆவேச பேச்சுக்கு அதிகாரிகள் கண்டிப்பு
குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்த்துறை மீது சராமாரி... குற்றச்சாட்டு; விவசாயிகளின் ஆவேச பேச்சுக்கு அதிகாரிகள் கண்டிப்பு
குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்த்துறை மீது சராமாரி... குற்றச்சாட்டு; விவசாயிகளின் ஆவேச பேச்சுக்கு அதிகாரிகள் கண்டிப்பு
ADDED : ஆக 30, 2025 12:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் மீது சராமரி குற்றச்சாட்டுகளை முன் வைத்ததற்காக, விவசாயிகளை அதிகாரிகள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
நந்தன் கால்வாய் திட்டம் இதுவரை முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆண்டுதோறும் ரூ.586 கோடி, ரூ.606 கோடி என்று நிதி ஒதுக்குகிறார்கள். இதுவரை ஒதுக்கீடு செய்த நிதி மற்றும் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்ததற்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு தொகை விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும். சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் பணம் கையா டல் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை உரிய தொகை வழங்கவில்லை. மின்மாற்றியில் தாமிர கம்பிகள் அடிக்கடி திருட்டுப்போவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும். விதை நெல் தட்டுப்பாடு உள்ளது. ஒரு டன் கொடுக்கும்போது 200 கிலோ நஷ்டம் ஏற்படுகிறது. உற்பத்தி மானியமும் கிடைப்பதில்லை. முதலில் வருபவர்களுக்கு சினிமா டிக்கெட் கொடுப்பதுபோல் உற்பத்தி மானியம் கொடுக்கப்படுகிறது.
திண்டிவனம் கிடங்கல் ஏரி வாய்க்கால் சீரமைக்காமல் உள்ளது. மக்காச்சோள விதைகள் மானியத்தில் வழங்க வேண்டும். சவுக்கு விலை டன்னுக்கு 566 ரூபாய் குறைந்துள்ளது. பெஞ்சல் புயலால் சேதமடைந்த தென்பெண்ணையாறு உடைப்பு மற்றும் திருப்பாச்சனுார் மலட்டாறு உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும். சாத்தனுார் அணையில் தற்போது 112 அடி தண்ணீர் உள்ளது.
அந்த அணை நிரம்பினால் கடந்தமுறை ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பு ஏற்படும். மழைக்காலத்திற்குள் ஆறுகளில் உடைப்புகளை சீரமைக்க வேண்டும். ஏரிகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மருதுார் ஏரி, சாலாமேடு பொன்னேரி ஏரிகளில் ஓட்டல், சாராய ஆலை கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்க 28 நாட்கள் வரை காலதாமதம் செய்கின்றனர்.
வருவாய்த்துறை செயல்பாடுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. பட்டா மாற்றம் கோ ரி விண்ணப்பித்தவர்களில் சிலர் இறந்துவிட்டனர். தாசில்தாரில் இருந்து எந்தவொரு அதிகாரிகளும் ஒழுங்காக பணி செய்வதில்லை. வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்துறை இந்த 3 துறைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தாலே விவசாயிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேசிய சில வி வசாயிகள், விவசாய நிலங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் திருடு போகிறது. இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் திருடர்களை பிடித்து வந்து விட்டுவிடுகின்றனரா. தாசில்தார் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஞாயிற்றுக்கிழமைகளில் காரை எடுத்துக்கொண்டு 2 லட்சம் ரூபாய் வரை வசூலில் ஈடுபடுகின்றார் என்று ஆவேசமாக பேசினர்.
இதைக்கேட்ட டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறைகளை மட்டும் பேசுங்கள், தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால், கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

