/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 19, 2025 06:53 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றங்கரையில் நீராடி மகிழ்ந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழுப்புரம் அருகே பிடாகம், பேரங்கியூர், அத்தியூர் திருவாதி, மரகதபுரம், எல்லீஸ்சத்திரம் மற்றும் வளவனுார் அருகேயும், சின்னகள்ளிப்பட்டு, திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார், ஏனாதிமங்கலம், சித்தலிங்கமடம் அண்டராயநல்லுார் பகுதி தென்பெண்ணையாற்றிலும்; திண்டிவனம், விக்கிரவாண்டி வராக நதி, வானுார், வீடூர், நெடிமொழியனுார் பகுதி சங்கராபரணி ஆறு என 25 இடங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஆறுகளில், ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் அடுத்த பிடாகம், பேரங்கியூர், அத்தியூர் திருவாதி, தென்பெண்ணையாற்றுப் பகுதியில் ஏராளமான கடைகளும், காய்கறி, பழங்கள், கால்நடைகளுக்கான அலங்கார பொருள்கள், விளையாட்டு பொருட்கள், கரும்பு, கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.
விழுப்புரம் அடுத்த அத்தியூர், பிடாகம், கண்டமானடி, வழுதரெட்டி, சாலாமேடு, மருதுார், கொளத்துார், ரெட்டிப்பாளையம், மரகதபுரம், கண்டம்பாக்கம், பேரங்கியூர், ஆனாங்கூர், சாலையகரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, கோவில் உற்சவமூர்த்திகள் கொண்டு வரப்பட்டு ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த டிச. மாதம் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆற்றங்கரை பகுதியில், ஆழமான தண்ணீரில் பொதுமக்கள், சிறுவர்கள் இறங்குவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆபத்தான பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது.
எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரத்திலிருந்து ஆற்றுத் திருவிழாவுக்கு காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

