/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்றுத் திருவிழா... கோலாகலம்!போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
/
மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்றுத் திருவிழா... கோலாகலம்!போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்றுத் திருவிழா... கோலாகலம்!போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்றுத் திருவிழா... கோலாகலம்!போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜன 20, 2026 03:26 AM

விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், என கொண்டாட்டத்தின் நிறைவாக நேற்று ஆற்றுத்திருவிழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் மற்றும் பேரங்கியூர் பகுதியில் ஆற்றுத்திருவிழா நடந்தது.
இதே போல், கிழக்கு பகுதியில் அத்தியூர் திருவாதி ஆற்றிலும், மேற்கு பகுதியில் எல்லீஸ் அணைக்கட்டு, ஏனாதிமங்கலம் ஆற்றுப்பகுதியிலும் திருவிழா நடந்தது.
ஆறுகளில் காலை 10:00 மணி முதல் திரண்டு வந்த பொதுமக்கள், மாலை 6:00 மணி வரை வந்தபடி ஆற்றில் குளித்தும், ஆற்று மணலில் குடும்பத்தோடு விளையாடியும் மகிழ்ந்தனர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்திருந்த செங்கரும்பு, கிழங்குகள், காய்கறிகள், தோட்டப் பயிர்களில் விளைந்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
பிரியாணி முதல் விதவிதமான உணவுகள், சிற்றுண்டி விற்பனையும் களைகட்டியது. சிறுவர்களுக்கான விளையாட்டு பொருள்கள், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றில் விளையாடி மகிழ்ந்தனர்.
விழுப்புரம், உளுந்துார்பேட்டை, அரசூர், திருவெண்ணைநல்லுார் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து கோவில் உற்சவர்கள் கொண்டு வரப்பட்டு, ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு பூஜை செய்து அலங்கரித்து மாட்டு வண்டிகளில் உற்சவர் வீதியுலா நடந்தது.
குறிப்பாக பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, கோதண்டராமர் அம்மன், ஆலங்குப்பம் பாண்டுரங்கர், அரசூர் தென்பெண்ணை ஆற்று அம்மன், காரப்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம், கண்டமானடி, சாலாமேடு, சித்தாத்துார்,வழுதரெட்டி, கண்டம்பாக்கம், காவணிப்பாக்கம், வி.மருதுார், திருப்பாச்சனுார், திருப்பாச்சாவடிமேடு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து உற்சவர்கள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர்.
கோலியனுார் அடுத்த சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றிலும் ஆற்றுத்திருவிழா நடந்தது. அங்கு, கோலியனுார் புத்துவாயம்மன், வாக்கூர் கலிவரதராஜர், அகரம் முத்துமாரியம்மன், ராமையன்பாளையம் அங்காளம்மன், சுந்தரிபாளையம் முத்துமாரியம்மன், ஓட்டேரிபாளயம் முத்துமாரியம்மன்.
மழவராயனுார் முத்துமாரியம்மன், புருஷானுார் மாரியம்மன், பஞ்மாதேவி முத்துமாரியம்மன் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து உற்சவர்கள் தீர்த்தவாரியில் பங்கேற்று சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல், தென்பெண்ணை ஆற்றில் அரகண்டநல்லுார், கலிஞ்சிக்குப்பம், கல்பட்டு, அருளவாடி, தெளிமேடு, பில்லுார், கொங்கராயனுார், மெய்யூர், மணம்பூண்டி, தேவனுார் பகுதியிலும், வீடூர் அணை, வராகநதியில் சின்னத்தச்சூர், கயத்துார், விக்கிரவாண்டி.
மேலகொந்தையிலும், பம்பை ஆற்றில் அய்யூர்அகரம், குயிலாப்பாளையத்திலும், சங்கராபரணி ஆற்றில் கென்டியாங்குப்பம், மலட்டாற்றில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில், ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
பொங்கல் விழாவின் நிறைவாக, ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ஆற்றுத்திருவிழா, இந்தாண்டும் திரளான மக்கள் கூட்டத்துடன் சிறப்பாக நடந்தது. ஆனால், திருவிழா நடந்த ஆற்று பகுதிகளில் போதிய ஒருங்கிணைப்பும், குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளின்றியும் மக்கள் அவதிப்பட்டனர்.
மேலும், வாகனம் நிறுத்ததிற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், போதிய போலீசாரின்றி, போதை ஆசாமிகள் அட்டகாசம், குழந்தைகள் மாயம் போன்ற பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்தன. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பிடாகம், பேரங்கியூரில் தேசிய நெடுஞ்சாலையில் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

