ADDED : மே 15, 2025 03:23 AM
கண்டமங்கலம்:விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கார்த்திகேயன், 53; பா.ம.க., ஒன்றிய செயலாளர். இவர் தன் வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய மளிகைக் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை முத்துகார்த்திகேயன் வெளியேயும், மனைவி ஸ்ரீவித்யா, மகள், மகனுடன் விவசாய நிலத்திற்கும் சென்றிருந்தனர். மற்றொரு மகன், மளிகை கடையில் வியாபாரத்தை கவனித்து வந்தார்.
விவசாய நிலத்திற்கு சென்ற ஸ்ரீவித்யா, வீடு திரும்பி பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்தும், பீரோவில் உள்ள துணிகள் சிதறியும் கிடந்தன.
பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் மூன்று லட்சம் மதிப்புள்ள நான்கு சவரன் தங்க செயின் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, முத்துகார்த்திகேயன் கொடுத்த புகாரின்படி, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.