ADDED : ஏப் 21, 2026 11:06 PM
விழுப்புரம்: மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.89.97 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 63 தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் 63 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என 126 குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 20ம் தேதி வரை 89 லட்சத்து 97 ஆயிரத்து 343 ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் மதுபானங்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல் துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் 2 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்து 135 ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 20ம் தேதி வரை கைப்பற்றியதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் 62 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் இதர பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
