/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை 'ஜோர்'
/
விழுப்புரத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 13, 2025 05:52 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் பொங்கல் பொருள்கள் குவிக்கப்பட்டு பரபரப்பான விற்பனை தொடங்கியுள்ளது.
விழுப்புரத்தில் தை பொங்கல் திருநாள், இன்று போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. நாளை தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து, ஒரு வார காலம் பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது. இந்த தை பொங்கல் பண்டிகைக்கான பொருள்கள், விழுப்புரம் நகரில் பல இடங்களில் நேற்று விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக நேருஜி சாலை, திரு.வி.க., வீதி, காந்தி வீதி, பாகர்ஷா வீதி, கே.கே.ரோடு, கிழக்கு பாண்டிரோடு, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் செங்கரும்பு, பொங்கல் பானைகள் மற்றும் வீடுகள், மாடுகளை அலங்கரிக்கும் அலங்கார பொருள்கள், திருஷ்டிக்கான பொருள்கள், பூக்கள் என, பல இடங்களில் பொருள்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.
பன்னீர் கரும்புகள் ஜோடி ரூ.40 முதல் ரூ.100 வரையும், பொங்கல் பானைகள் ரூ.80 முதல் ரூ.100, ரூ.150, ரூ.200 வரையும் விற்கின்றன. திருஷ்டி பொம்மைகள், கருப்பு கயிறுகள், செப்புத்தகடு, படிகார கல், கடல் சங்கு, கம்பளி கயிறுகள் போன்றவை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
வணிக வீதிகளில் மாடுகளுக்கான கயிறுகள், அணிகலன்கள், வீடுகளுக்கு பெயிண்ட் அடிப்பதற்கான வண்ண பெயிண்ட்டுகள், சுண்ணாம்பு, வீட்டு முகப்பு அலங்கார பொருட்கள் விற்பனையும் , துணிக் கடைகளிலும், சாலையோர கடைகளிலும் துணிமணிகள் பல ரகங்களில் குவிக்கப்பட்டுள்ளதால், அதனை வாங்குவதற்கு, பொது மக்கள் குவிந்துள்ளனர்.