/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலிக்கு விரைவில் முற்றுப்புள்ளி; ஆன்லைனில் வரப்போகுது அடங்கல் சான்று
/
போலிக்கு விரைவில் முற்றுப்புள்ளி; ஆன்லைனில் வரப்போகுது அடங்கல் சான்று
போலிக்கு விரைவில் முற்றுப்புள்ளி; ஆன்லைனில் வரப்போகுது அடங்கல் சான்று
போலிக்கு விரைவில் முற்றுப்புள்ளி; ஆன்லைனில் வரப்போகுது அடங்கல் சான்று
UPDATED : பிப் 02, 2026 10:40 AM
ADDED : பிப் 02, 2026 04:09 AM

விழுப்புரம்: விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கான அடங்கல் சான்றிதழ் ஆன்லைனில் பெறும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாய நிலங்களுக்கான ஆவண சான்றுகளில் அடங்கல் முக்கியமானதாக உள்ளது.
அடங்கல் என்பது ஒரு நிலத்தின் சர்வே எண்ணில் எந்த வகையான பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழ் வி.ஏ.ஓ., மூலம் வழங்கப்படுகிறது. இந்த அடங்கல் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, நில உரிமை மாற்றம், வங்கிக் கடன் பெறுதல், பயிர் காப்பீடு, அரசின் வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரண உதவிகள், உழவர் பாதுகாப்புத் திட்டம், மானியங்கள், மின் இணைப்பு, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்ட அரசு திட்டங்களை விவசாயிகள் பெற முடியும்.
இந்த அடங்கல் சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ.,க்கள், விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு வழங்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி இல்லாமல் விவசாயிகள் கூறும் பயிர்களுக்கு, வி.ஏ.ஓ.,க்கள் அடங்கல் சான்றிதழ் வழங்குகின்றனர். இதனால், பயிர் சாகுபடி செய்யாமலேயே விவசாயிகள் போலியாக அடங்கல் வாங்கி அரசு திட்டங்களை பெற்று வரும் நிலை உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடங்கல் சான்றிதழ் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான முதல் கட்டமாக, விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
அதாவது, டிஜிட்டல் கிராப் சர்வே மூலம் கணக்கெடுப்பு செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தற்போது ராபி பருவத்தில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 17.27 லட்சம் உட்பிரிவுகளில் பயிரிடப்பட்ட பயிர்களில் இதுவரை 12.27 லட்சம் உட்பிரிவுகளில் பயிரிடப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து கணினியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்பணி முழுமையாக நிறைவடைந்தவுடன், ஆன்லைனில் அடங்கல் சான்றிதழ் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆன்லைன் அடங்கல் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், போலியாக இச்சான்றிதழ் பெறும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதாவது, ஆன்லைன் அடங்கல் முறைக்கு விண்ணப்பிக்கும்போது, நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னரே, அடங்கல் சான்றிதழ் பெற முடியும். சாகுபடி செய்யப்பட்ட பயிர் தொடர்பான போட்டோ இல்லையென்றால், அடங்கல் பெற முடியாது.
மேலும், அடங்கல் பெறுவதற்கு வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு விவசாயிகள் செல்லும்போது, அங்கு அலுவலர்கள் இல்லாமல் இருந்தால் சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படும். ஆனால், ஆன்லைன் முறை வந்தால், வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு விவசாயிகள் அலைய வேண்டாம். நெட் சென்டரில் பதிவு செய்து, சுலபமாக அடங்கல் சான்றிதழ் பெற முடியும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

