ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூமில்... சீல் வைப்பு: 3 மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூமில்... சீல் வைப்பு: 3 மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 24, 2026 07:36 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 3 ஓட்டு எண்ணும் மையங்களில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு மூன்றடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, மயிலம், திண்டினம் (தனி), வானுார்(தனி),- விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. 2,165 ஓட்டுச்சாவடிகளில் காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை தேர்தல் நடந்தது.
ஓட்டுப்பதிவு பணிகள் முடிந்து, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலிருந்தும் ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம், வானுார் தொகுதி விழுப்புரம் தொகுதியில் 336, வானுார் தொகுதியில் 299 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று காலை 7:00 மணி வரை வாகனங்கள் மூலம் கீழ்பெரும்பாக்கம் அரசு அண்ணா கலைக் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, ஒவ்வொரு தொகுதிக்கும் அமைக்கப்பட்ட தனித்தனி ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டு 11:30 மணியளவில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஷாலினி பண்டிட், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜிவ் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதி விக்கிரவாண்டி தொகுதியில் 310, திருக்கோவிலுார் தொகுதியில் 330 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று காலை 7:00 மணி வரை விழுப்புரம் காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, கீழ் தளத்தில் உள்ள ஸ்டராங் ரூமில் அடுக்கி வைத்து 11:15 மணிக்கு தேர்தல் பொது பார்வையாளர் ஓம்பிரகாஷ் வர்மா, தேர்தல் அலுவலர் ஆனந்த்குமார் சிங் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், தேர்தல் அலுவலர் விஜயா தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
திண்டிவனம், மயிலம், செஞ்சி தொகுதிகள் திண்டிவனம் தொகுதி முழுதும் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் அண்ணா பொறியியல் கல்லுாரியின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு வரப்பட்டு காலை 10:30 மணியளவில், சப் கலெக்டர் ஆகாஷ், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் மயிலம் தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் அலி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
செஞ்சி தொகுதியில் பதிவான இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழரசன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மூன்றடுக்கு பாதுகாப்பு
வரும் மே மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை 7 தொகுதிகளில் ஓட்டுகள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி இயந்திரங்களுக்கான பாதுகாப்பு அறை முன் துப்பாக்கி ஏந்திய (சி.ஐ.எஸ்.எப்.,) துணை ராணுவப்படையினர் உள்ளனர். கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பில் உள்ளனர். மையத்தின் வாயிலில் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலா 8 பேர் கொண்ட துணை ராணுவ குழு, 12 சிறப்பு காவல் படை போலீசார், 30 உள்ளூர் போலீசார் என 50 பேர், 3 ஷிப்டுகள் வீதம் மொத்தம் 150 பேர் ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்கள், 24 மணி நேரமும் சி.சி.டி.வி., மூலம், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
