வருவாய்த் துறை சேவைகளில் தாமதம்... கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
வருவாய்த் துறை சேவைகளில் தாமதம்... கூடாது அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : மே 14, 2026 05:51 AM
ADDED : மே 13, 2026 11:41 PM

விழுப்புரம்: பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை, விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., அரிதாஸ், விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பொதுமக்களின் நலனுக்காக அரசின் பல்வேறு சேவைகள் குறித்து மேலும், பொதுமக்கள் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள சாதிச் சான்றிதழ், உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு, இணைய வழி சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு இனங்கள் குறித்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், பொதுமக்கள் இணையவழி சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்து கவனமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை சம்மந்தமாக பொதுமக்கள் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள சாதிச் சான்றிதழ், உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு, இணைய வழி சான்றுகள் போன்றவைகள் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உரிய விசாரணை மேற்கொண்டு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்கிட அரசுத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். மேலும் அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களிடம் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
