தெற்கு, வடக்கில் நான்கு தொகுதிகள்... கைநழுவியது:மத்திய மாவட்ட தி.மு.க., சாதனை
தெற்கு, வடக்கில் நான்கு தொகுதிகள்... கைநழுவியது:மத்திய மாவட்ட தி.மு.க., சாதனை
UPDATED : மே 07, 2026 04:50 PM
ADDED : மே 07, 2026 04:30 PM

- நமது நிருபர்-
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த தேர்தலில் 4 இடங்களில் வென்ற தி.மு.க., இந்த முறை 2 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.
செஞ்சி தொகுதியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் தொகுதியில் வி.சி., வேட்பாளர் வன்னிஅரசு, மயிலம் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டனர்.
திண்டிவனம் தொகுதியில், வன்னி அரசு 734 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், 82 ஆயிரத்து 353 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் 46 ஆயிரத்து 267 ஓட்டுகள் பெற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
செஞ்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மஸ்தானை விட கூடுதலாக 12 ஆயிரத்து 645 ஓட்டுகள் பெற்று, பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமார் வெற்றி பெற்றார். இத்தொகுதியில், கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற மஸ்தான், 2026 ம் ஆண்டு தேர்தலில் 'ஹாட்ரிக்' வெற்றியை தவறவிட்டார்.
விழுப்புரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக களமிறங்கிய, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், 4,119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் வென்ற லட்சுமணன், இத்தேர்தலில் மீண்டும் வென்றுள்ளார். இதே போல், வானுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கவுதம், 7 ஆயிரத்து 24 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார். இங்கு, த.வெ.க., இரண்டாவது இடமும், அ.தி.மு.க., மூன்றாவது இடமும் பிடித்தன.
விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார், 910 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, 60 ஆயிரத்து 941 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
திருக்கோவிலுார் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி, 73 ஆயிரத்து 33 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு, தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, 62 ஆயிரத்து 452 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், விழுப்புரம், வானுார், திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளை தி.மு.க., கூட்டணி வென்றுள்ளது. விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில், வடக்கு, தெற்கு மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை. மத்திய மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், வானுார் ஆகிய தொகுதிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
