/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி - மேல்களவாய் சாலையில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை
/
செஞ்சி - மேல்களவாய் சாலையில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை
செஞ்சி - மேல்களவாய் சாலையில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை
செஞ்சி - மேல்களவாய் சாலையில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை
ADDED : மே 06, 2025 05:16 AM

செஞ்சி: செஞ்சி - மேல்களவாய் சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை நடந்து வருகிறது.
செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையின் குறுக்கே சங்கராபரணி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது.
தரைப்பாலத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் துார்ந்து போனதால் குறைந்த அளவு மழை பெய்தாலும் பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது.
50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சென்று வரும் பிரதான சாலையில், ஆற்று பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் போது பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் சுற்றுப்பாதை வழியாக செஞ்சிக்கு வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய 10 முன்னுரிமை பணி பட்டியலில், மஸ்தான் எம்.எல்.ஏ., மேல்களவாய் மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்ட 23 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயார் செய்து அரசுக்கு அனுப்பினர்.
அதன் அடிப்படையில், கடலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 3 நாட்களாக மண் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகின்றது.
மண் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விரைவில் திட்ட மதிப்பு தயாரித்து, டெண்டர் விடப்பட்டு, மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
இதன் மூலம் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நிலை உருவாகி உள்ளது.