ADDED : ஜன 05, 2025 04:58 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நிலம் தொடர்பான சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், பட்டா மாற்றம், நிலஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நிலஅபகரிப்பு மற்றும் நிலக்கையகம் தொடர்பான 668 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இவை, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கையாக மனுக்களுக்கு பரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் உரிய மனுதாரரிடம் தகவல் வழங்கி ஆவணங்கள் பெற்று தீர்வு காண வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்சு நிகம், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் கனிமொழி உட்பட துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.