ADDED : செப் 05, 2025 07:54 AM
வேதங்களிலும், உபநிஷதங்களிலும் சொல்லப்பட்ட மந்திர வார்த்தைகள் ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் பொதிந்துள்ளரு என்பதை நம் பெரியோர்கள் ரசமாக அனுபவிப்பர். பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ள பதங்களை சுவாமி தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தில் பொதித்து தியான ஸ்லோகமாக அருளியுள்ளார் என்று அனுபவிப்பர் ஆன்றோர்.
உபநிஷதங்களில் சொல்லப்பட்டுள்ள 'ப்ரஹ்மத்வம்' அல்லது 'ஈஸ்வரத்வம்' ஆகியவற்றை பிரதிபளிப்பதாகவும், உண்மையின் உறைவிடமாகவும், கலைகளின் களஞ்சியமாகவும், எல்லையில்லாதபடி பரந்து விரிந்த பரப்பிரம்மத்தின் மொத்த உருவகமாகும். மற்றவற்றாலும் துாண்டப்படாத அல்லது மேன்மை படுத்தப்படாத, தனக்கே இயல்பானபடி துாயனாய், காப்பவனும், மீட்பனும், மீண்டும் தன் ஒப்பற்ற மேன்மைமிகு சீர்மையால் பிழை பொறுத்து ஏற்பவனுமாக மாசற்ற உத்தமமான ஸ்படிக மணியிலிருந்து ஒளிரும் வெண்மையான ஒளிக்கீற்றுகள் போல் இருக்கின்றார் என சுவாமி தேசிகனால் மங்களாசாசனம் செய்யப்பட்டவர் ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள்.
ஸ்ரீஹயக்ரீவ மந்திரங்களைத் தியானம் செய்பவன் வேதம், ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச புராணங்களை அறிந்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறும் பாக்யவானாவான் என பிரம்மனின் வாக்காக ஸ்ரீஹயக்ரீவ உபநிஷதம் உபதேசிக்கிறது. ஸ்ரீ ஹயக்ரீவரின் ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய உயர்ந்த வாக்கு வன்மையும், உண்மையான ஞானமுடைய அறிவுத்திறனும் உண்டாகும். நிறைந்த கல்வியும் நீங்காத செல்வமும் அளிக்கும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவனின் மலரடிகளைத் தொழுவோம்.
மாசற்ற உத்தமமான ஸ்படிக மணியிலிருந்து ஒளிரும் வெண்மையான ஒளிக்கீற்றுக்கள் போல் ஒளிர்கின்ற, குதிரை முகத்துடன் கூடிய துாய திருமேனியுடையவனாய், ஞானத்தின் நிலைக்களனாகவும், எல்லையில்லா ஆனந்தம் நிறைந்தவனாகவும் உள்ள, தானே அதுவுமாகி, அனைத்தும் தானேயாகி அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரமாகவும் உள்ள பரப்ரம்மமாகிய ஸ்ரீஹயக்ரீவனாகிய எம்பெருமானைத் தியானித்து வந்தனை செய்வோம்.
துாய ஸ்படிக மணிகளால் ஆன மலையைப் போன்ற திருமேனி உடையவனாய் எம்பெருமான் சேதனர்களை உய்விக்க, தான் தோன்றியாக ஸ்ரீ ஹயக்ரீவ ரூபத்தில் அவதரித்தான். தன் திருமேனியிலிருந்து ஒளிரும் அமுதம் போன்ற வெள்ளொளியால் மூவுலகும் பிரகாசிக்கும்படிச் செய்கின்றான்.
குதிரை வடிவத்திற்கேற்ப எம்பெருமான் 'ஹல ஹல' என்று கனைக்கும் ஒலியில் எல்லையில்லாத வேதாந்தங்களின் பொருள் மன்னிக் கிடப்பதுபோல் தோன்றுகிறது. ஹயக்ரீவ பெருமான், அவ்வொலியைக் கேட்பவர்களுக்கு வேதாந்த பொருள் அனைத்தும் நன்கு விளங்கும்படி செய்கின்றான். அடியார்களின் தீங்குகள் அனைத்தும் அழியும்படிச் செய்கின்றான். இப்படிப்பட்ட ஞான ஸ்வரூபனான ஸ்ரீ ஹயக்ரீவனை நாம் துதிக்கக் கடவோம்.